

இயற்கை எரிவாயு வளம் மிகுந்த தெற்கு சீன கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்துக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் தனது தெற்காசிய கூட்டணி நாடுகளுக்கு அமெரிக்கா ராணுவ உதவிகளை வழங்கும் என்று அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.
பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு வழங்கும் 250 மில்லியன் டாலர்கள் உதவியின் ஒரு பகுதியாக போர்க்கப்பல் ஒன்றையும் வழங்க அமெரிக்கா முடிவெடுத்துள்ளது.
ஆசிய-பசிபிக் தலைவர்கள் சந்திப்புக்காக மணிலா வந்த அமெரிக்க அதிபர் ஒபாமா பல்வேறு உதவி வாக்குறுதிகளை வழங்கினார்.
“தெற்கு சீன கடல்பகுதியில் சுதந்திர போக்குவரத்து மற்றும் பாதுகாப்பை அடிக்கோடிட்டு உறுதி செய்வதற்காகவே இந்தப் பயணம்” என்றார் ஒபாமா.
தெற்கு சீன கடல் பகுதியில் சீனா செயற்கைத் தீவுகளை உருவாக்கி வருவதையடுத்து அமெரிக்கா இதே பகுதியில் ஏவுகணை அழிப்பு தளவாடம் ஒன்றையும், பி-52 ரக குண்டுகளையும் அப்பகுதிக்கு கொண்டு சென்றுள்ளது.
உலகின் மிக பலவீனமான ராணுவத்தைக் கொண்ட பிலிப்பைன்ஸ் சீனாவின் ஆதிக்க ஆக்ரமிப்புகள் குறித்து தொடர்ந்து கவலைகளை வெளியிட்டு வரும் நிலையில் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது நிச்சயம் சீன தரப்பில் கடும் எதிர்ப்பலைகளை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவுக்கு தொடர்பில்லாத பகுதிகளில் அந்நாடு தலையீடு செய்வது நல்லதல்ல என்று சீனாவும் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் முந்தைய விரோதி வியட்நாமும் சீனாவின் தெற்கு சீன கடல் பகுதி ஆதிக்கத்துக்கு எதிராக குரல் கொடுத்து வருவதையடுத்து 40.1 மில்லியன் டாலர்கள் நிதியுதவியை அமெரிக்காவிடமிருந்து பெறவுள்ளது. மலேசியாவுக்கும் கடல் பாதுகாப்பு உதவியாக 2.5 மில்லியன் டாலர்கள் உதவி வழங்குகிறது அமெரிக்கா.