Last Updated : 14 Nov, 2015 08:16 AM

 

Published : 14 Nov 2015 08:16 AM
Last Updated : 14 Nov 2015 08:16 AM

பாரீஸ் பயங்கரவாத தாக்குதலில் 120-க்கும் மேற்பட்டோர் பலி; ஐ.எஸ். இயக்கம் பொறுப்பேற்பு

பிரான்ஸ் தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஐ.எஸ். புது மிரட்டல்

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பயங்கரவாதிகள் 6 இடங்களில் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 128 ஆக அதிகரித்துள்ளது. ஏறத்தாழ 200 பேர் காயமடைந்தனர்.

பாரீஸில் இசை அரங்கம், கால்பந்து மைதானம், ஓட்டல்கள் என 6 முக்கிய இடங்களில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு, சிரியா - இராக்கில் செயல்படும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

ஐ.எஸ். மிரட்டல் அறிக்கை:

ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் தனது அறிக்கையில், "வெடிகுண்டுகளுடன் துப்பாக்கிகளை ஏந்திய எங்களது 8 சகோதரர்களும் விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பிரான்ஸின் முக்கிய நிலைகளைத் துல்லியமாக தேர்ந்தெடுத்து செயல்பட்டுள்ளனர்" என்று குறிப்பிட்டுள்ளது.

தங்களது போர் வீரர்கள் மற்றும் இஸ்லாமின் நபிகளுக்கு எதிராக செயல்படுவதற்கு பதிலடி தரும் வகையில்தான் இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தங்களுக்கு எதிரான கொள்கைகளில் பிடிவாதமாக இருக்கும்பட்சத்தில், தங்களது தாக்குதல் இலக்குகளில் முதன்மையான இடத்தில் பிரான்ஸ் நீடிக்கும் என்றும் அதில் ஐ.எஸ். எச்சரித்துள்ளது.

முன்னதாக, பத்தக்லோன் இசை அரங்கில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் பிரெஞ்சு மொழியில் பேசியுள்ளனர். அவர்கள் கூறியபோது, 'சிரியாவில் பிரான்ஸ் ராணுவம் போரில் ஈடுபட்டு வருகிறது, அதற்கு பழிவாங்கவே பாரீஸில் தாக்குதல் நடத்துகிறோம், சிரியா, இராக்கில் இருந்து பிரான்ஸ் ராணுவம் வாபஸ் பெறாவிட்டால் தொடர்ந்து தாக்குவோம்' என்று மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதனிடையே, சகாக்களுடன் சூழ்ந்திருக்கும் ஐ.எஸ். தீவிரவாதி ஒருவர் பேசும்படி வெளியான வீடியோ ஒன்றில், "இஸ்லாம் மீது நம்பிக்கையற்றவர்களை எங்கு பார்த்தாலும் அவர்களுக்கு எதிராக போரிட உங்களுக்கு உத்தரவிடுகிறோம். இனிமேலும் நீங்கள் காத்திருக்க வேண்டாம். இலக்குகளை தாக்குவதற்காக ஆயுதங்களும் கார்களும் தயாராக உள்ளன. உங்கள் கையில் விஷம் கிடைத்தாலும் அதை குடிநீர், உணவில் கலப்பதன் மூலம் அல்லாவின் எதிரிகளில் ஒருவரையாவது கொலை செய்யுங்கள்" என்று அந்த நபர் அழைப்பு விடுக்கிறார்.

முந்தையச் செய்திப் பதிவுகள்:

ஐ.எஸ். தொடுத்த போர்: பிரான்ஸ் அதிபர் ஹாலந்தே

ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தால் 'திட்டமிட்டு தொடுக்கப்பட்ட போர்' என்று பிரான்ஸ் அதிபர் ஹாலந்தே தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறும்போது, துப்பாக்கி ஏந்திய 8 பேரும், ஒரு தற்கொலைப் படைத் தீவிரவாதியும் இந்தத் தாக்குதலை நிகழ்த்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வெளியில் இருந்து ஒருங்கிணைக்கப்பட்டு, இந்தத் தாக்குதல் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டது என்றும், இது ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் தொடுத்த போர் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

பாரீஸில் 8 தற்கொலைப் படை தீவிரவாதிகள் கோழைத்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர், அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும், யாரும் தப்பமுடியாது என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த பயங்கரத் தாக்குதலைத் தொடர்ந்து, தேசம் முழுவதும் மூன்று நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அவசரநிலை பிரகடனம்

பயங்கரவாத தாக்குதலை அடுத்து பிரான்ஸில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை அந்நாட்டு அதிபர் ஹாலந்தே பிறப்பித்தார். மேலும், பிரான்ஸ் எல்லைகளில் சீல் வைத்து பாதுகாப்பை அதிகரிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

தலைநகர் பாரீஸில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். ஈபிள் டவர் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் உயர் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

அனைத்து பாதுகாப்புப் படையினரும் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகின்றனர். பிரான்ஸின் சர்வதேச எல்லைகள் மூடப்பட்டு தீவிர சோதனைகள் நடத்தப்படுகின்றன. பாதுகாப்பு படையினருக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டு யாரையும் எங்கும் சோதனை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 3 நாட்கள் துக்கம் கொண்டாட அதிபர் ஹோலாந்தே அழைப்பு விடுத்துள்ளார். பிரான்ஸில் உயிரிழந்தவர்களுக்காக அமெரிக்கா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, பிரிட்டன் உட்பட உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் கூடி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பாரீஸில் நடந்த தாக்குதலில் இருந்து மீட்கப்பட்டவர்கள் | படம்: கெட்டி இமேஜஸ்

6 இடங்களில் கொடூரத் தாக்குதல்கள்:

பாரீஸில் உள்ள பத்தக்லோன் இசை அரங்கில் வெள்ளிக்கிழமை இரவு அமெரிக்க ராக் இசை குழுவினரின் கச்சேரி நடைபெற்றது. அந்த அரங்கில் 1500 பேர் குழுமியிருந்தனர். கச்சேரி நிறைவடையும் நேரத்தில் ஏகே47 துப்பாக்கி ஏந்திய 4 பயங்கரவாதிகள் திடீரென உள்ளே நுழைந்தனர். அவர்கள் கண்ணில் எதிர்பட்டவர்களை எல்லாம் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு வீழ்த்தினர். பின்னர் துப்பாக்கி முனையில் 100-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்தனர்.

அதிரடிப் படை போலீஸார் அரங்கை சுற்றி வளைத்ததும் 4 பயங்கரவாதிகளும் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து சிதறினர். இந்த தாக்குதலில் ஒட்டுமொத்தமாக 112 பேர் உயிரிழந்தனர். சுமார் 100 பேர் காயமடைந்தனர்.

பயங்கரவாதிகளிடம் இருந்து உயர் தப்பிய இளம்பெண் கூறியபோது, பயங்கரவாதிகள் 4 பேரும் கருப்பு உடை அணிந்திருந்தனர், முகமூடி அணியவில்லை, கச்சேரியின் பின்புறம் இருந்து 4 பேரும் குருவிகளை சுடுவதுபோல் எங்களை சுட்டுக் கொன்றனர் என்று தெரிவித்தார்.

மைதானத்தில் மனிதவெடிகுண்டு...

இதே நேரத்தில் பாரீஸின் செயின்ட் டென்னிஸ் மைதானத்தில் கால்பந்து போட்டி நடைபெற்று கொண்டிருந்தது. அந்தப் போட்டியை பிரான்ஸ் அதிபர் ஹோலாந்தே உட்பட சுமார் 80 ஆயிரம் பேர் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது இரண்டு தற்கொலைப் படை பயங்கரவாதிகள் மைதானத்தின் வாயிலில் வெடித்துச் சிதறினர். இதில் பலர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர்.

மைதானத்துக்குள் பல இடங்களில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் வெடித்தன. அதிபர் ஹோலாந்தே அமர்ந்திருந்த இடத்துக்கு அருகிலும் குண்டு வெடித்தது. பாதுகாப்புப் படை வீரர்கள் உடனடியாக அதிபரை ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்றனர்.

ஓட்டல்களில் தாக்குதல்...

பாரீஸின் மையப் பகுதியில் உள்ள கம்போடிய ஓட்டல், மதுபான பார் ஆகியவற்றுக்குள் பயங்கரவாதிகள் நுழைந்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இந்த தாக்குதல்களில் 14 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

மேலும் நடைபாதையில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் 18 பாதசாரிகள் இறந்தனர். பலர் காயமடைந்தனர். அருகில் இருந்து ஜப்பானிய ஓட்டல் மீதும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

மேலும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய இடங்களில் இருந்த மதுபான பார்கள், ஹோட்டல்கள் மீதும் வெளிப்புறமாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஏராளமானோர் காயமடைந்தனர்.

படம்: ராய்ட்டர்ஸ்

'பாரீஸ் நகரம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 128 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தாக்குதல் நடத்திய 8 தற்கொலைப் படை பயங்கரவாதிகளும் வெடித்துச் சிதறி இறந்துவிட்டனர்' என்று பாரீஸ் போலீஸார் தெரிவித்தனர்.

பாரீஸ் தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கெல், இந்திய பிரதமர் நரேந்திர மோடி உட்பட உலகத் தலைவர்கள் அனைவரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஒபாமா கண்டனம்:

பாரீஸ் தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களின் சந்திப்பின்போது ஒபாமா, "பயங்கரவாதிகள் மீண்டும் ஒருமுறை அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதல் பிரான்ஸ் மீதானது மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனித குலத்தின் மீதான தாக்குதல்.

பிரான்ஸ் நாட்டுடன் இணைந்து நீதியை நிலைநாட்ட அமெரிக்கா அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருக்கிறது" என்றார்.

மேலும், பிரான்ஸ் அதிபர் ஹாலந்தேவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஒபாமா பேசினார்.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கண்டனம்

பாரீஸில் நடந்துள்ள பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பிரான்ஸ் தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். பிரான்ஸுக்கு இந்தியா துணை நிற்கும். தாக்குதலில் சிக்கியவர்கள் குடும்பங்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

பாரீஸில் தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தின் அருகே போலீஸார் அணிவகுப்பு: படம்: ராய்ட்டர்ஸ்.

ஐ.நா. பொதுச் செயலாளர் கண்டனம்:

ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன், "பாரீஸில் பல இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். இதற்கு என் கடுமையான கண்டனத்தை பதிவு செய்கிறேன், பட்லாகா தியேட்டரில் பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ள அப்பாவி பொது மக்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்துகிறேன்" எனக் கூறியுள்ளார்.

பிரதமர் மோடி கண்டனம்:

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கால்பந்து மைதானம் உட்பட பல்வேறு இடங்களில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பாரீஸில் இருந்து வந்துள்ள பயங்கரவாத தாக்குதல் செய்தி மிகுந்த வேதனை அளிப்பதாகவும், அச்சுறுத்துவதாகவும் உள்ளது. பயங்கரவாதிகள் தாக்குதலில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மோசமான தருணத்தில் இந்தியா பிரான்ஸுக்கு துணை நிற்கும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

இந்திய தூதரகம் உதவி எண் அறிவிப்பு

பிரான்ஸில் உள்ள இந்தியர்கள் உதவிக்காக இந்திய துணைத் தூதரகம் சார்பில் 0140507070 என்ற எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் பக்கம் துவக்கம்:

பாரீஸ் பயங்கரவாதிகள் தாக்குதலில் தங்கள் உறவுகள், நட்புகள் பத்திரமாக இருக்கின்றனரா என்பது குறித்த தகவல்களைப் பறிமாறிக் கொள்ள ஏதுவாக ஃபேஸ்புக் நிறுவனம் பிரத்யேக பக்கத்தை உருவாக்கியுள்ளது. Paris Terror Attacks என்ற பக்கத்தை ஃபேஸ்புக் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

அதில் "Mark them safe if you know they’re OK" என்ற ஒரு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதை பாரீஸ் மக்கள் பயன்படுத்தி உறவுகளுக்கு தங்களது நலனையும், தங்கள் உறவுகள் நலனையும் உறுதிப்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

கடந்த ஜனவரியிலும் தாக்குதல்:

பாரீஸில் உள்ள சார்லி ஹெப்டோ என்ற வார பத்திரிகை அலுவலகத்தினுள் கடந்த ஜனவரி மாதம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அலுவலகத்துக்குள் புகுந்த முகமூடி அணிந்த 3 நபர்கள் அந்த அலுவலகத்தின் ஒவ்வொரு பகுதியாக சென்று கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். இதில் பத்திரிகையின் ஆசிரியர், 4 கார்ட்டூனிஸ்டுகள் உட்பட 12 பேர் பலியாகினர்.