தெற்கு பசிபிக் கடலில் மிகசக்தி வாய்ந்த நிலநடுக்கம்: பிஜி, நியூஸி. ஆஸி. நாடுகளுக்கு விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை வாபஸ்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read



தெற்கு பசிபிக் கடலில் நேற்று இரவு 7.7 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, ஆஸ்திரேலியாவின் சில மாநிலங்கள், நியூஸிலாந்து, பிஜி மற்றும் வனுட்டு ஆகிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் திரும்பப் பெறப்பட்டது.

அமெரி்க்க நிலவியல் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட தகவலில், தெற்கு பசிபிக் கடலில், நியூ செலிடோனியாவின் கிழக்கு வாவோ பகுதியிலிருந்து 415 கி.மீ தொலைவில் கடலில் 10 கி.மீ ஆழத்தில் வியாழக்கிழமை நள்ளிரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 7.7. ரிக்டர் அளவில் இருந்ததால், நிச்சயம் சுனாமி அலைகள் எழும்பக்கூடும்.” எனத் தெரிவித்திருந்தது.

அமெரிக்காவின் என்டபிள்யுஎஸ் சுனாமி எச்சரிக்கை மையம் விடுத்த அறிவிப்பில் “ தெற்கு பசிபிக்கடலில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் சுனாமி அலைகள் சிலபகுதிகளில் உருவாகலாம். இந்த அலைகள், 0.3 மீட்டர் முதல் ஒரு மீட்டர் உயரத்துக்கு பிஜி, நியூஸிலாந்து, வனுட்டு ஆகிய தீவுகளில் ஏற்படலாம்” எனத் தெரிவிக்கப்படிருந்தது.

ஆஸ்திேரலிய வானிலை மையமும், சுனாமி அலைகள் கடலில் உருவாவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன என்று ட்விட்டில் தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள லார்ட் ஹோவ் தீவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

நியூஸிலாந்து தேசிய அவசரகால மேலாண்மை அமைப்பு விடுத்த அறிவிப்பில் “ கடற்கரைப்பகுதியில் இருக்கும் மக்கள் உடனடியாக கடல்பகுதியிலிருந்து வெளியே பாதுகாப்பான உயரமான பகுதிக்கு சென்றுவிட வேண்டும். 7.7. ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், நிச்சயம் சுனாமி அலைகளை எதிர்பார்க்கலாம். ஆதலால், கடற்பகுதிகள், துறைமுகங்கள், ஆறுகள், கடல்முகத்துவாரங்களில் இருக்கும் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் ” என எச்சரித்தது.

நியூஸிலாந்தின் வடக்குப்பகுதியின் வடபகுதி தீவுகள், கிரேட் பேரியர் தீவு, ஆக்லாந்தின் கிழக்குப்பகுதி ஆகியவற்றில் சுனாமி அலைகள் தாக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை சுனாமி அலைகள் ஏற்பட்டதற்கான தகவல் ஏதும் இல்லை.

இதையடுத்து, நியூஸிலாந்து தேசிய அவசரகால மேலாண்மை அமைப்பு சில மணிநேரத்துக்கு முன் விடுத்த அறிவி்ப்பில், “ சமீபத்தில் கிடைத்த ஆய்வுகளில் அடிப்படையில், கடலில் சுனாமி அலைகளின் வீரியம் குறைந்துள்ளது. இதனால், நார்த் கேப், கிரேட் பாரியர் தீவு உள்ளிட்ட பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளது. இருப்பினும் மக்கள் கடல்பகுதிக்கு செல்லாமல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு இந்தோனேசியாவின் சுலாவசி தீவில் ஏற்பட்ட சுனாமியில் சிக்கி 4,300க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். கடந்த 2004-ம் ஆண்டு 9.1 ரிக்டர் அளவில் இந்தோனேசியாவில் சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், ஏற்பட்ட சுனாமியில் 2.20 லட்சம் பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in