மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போலீஸார் போராட்டம்

படம் உதவி: ட்விட்டர்
படம் உதவி: ட்விட்டர்
Updated on
1 min read

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வலுவடைந்து வருகிறது.

செவ்வாய்க்கிழமை நைப்பியாவில் ராணுவத்திற்கு எதிராக பொது மக்கள் நடத்திய போராட்டத்தில் போலீஸார் ரப்பர் குண்டுகளை பயன்படுத்தி கலைத்தனர். இந்த தாக்குதலில் இருவர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தொடர்ந்து மியான்மரில் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். காயா மாகாணத்தில் போலீஸார் பலரும் பொதுமக்களுடன் இணைந்து ராணுவத்துக்கும் எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியது.

சுகாதாரப் பணியாளர்களும் மியான்மரில் அங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நடந்தது என்ன?

மியான்மரில் கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி, புதிய அரசை ஏற்க ராணுவம் மறுத்தது.

இதுதொடர்பாக மியான்மர் அரசுக்கும் ராணுவத்துக்கும் இடையே மோதல் நீடித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் ஆங் சான் சூச்சி தலைமையிலான கட்சியின் ஆட்சியைக் கவிழ்த்து, ராணுவம் ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றியது.

மேலும் ஆங் சான் சூச்சி, மியான்மரின் அதிபர் யு வின் மியிண்ட் மற்றும் முக்கியத் தலைவர்களையும் வீட்டுக் காவலில் ராணுவம் வைத்தது. ஆங் சான் சூச்சி, முறைகேடாக வாக்கி டாக்கிகளை இறக்குமதி செய்ததாக ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், அவரை பிப்ரவரி 15 வரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆங் சான் சூச்சி விடுதலை செய்யப்பட வேண்டும் என ஐ. நா., உள்ளிட்ட அமைப்புகள் கேட்டுக் கொண்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in