

மியான்மர் ராணுவம் அந்நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து அந்நாட்டுடனான உறவை முறித்துக் கொண்டதாக நியூசிலாந்து அரசு தெரிவித்துள்ளது.
மியான்மரில் கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி, புதிய அரசை ஏற்க ராணுவம் மறுத்தது.
இது தொடர்பாக மியான்மர் அரசுக்கும் ராணுவத்துக்கும் இடையே மோதல் நீடித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் ஆங் சான் சூச்சி தலைமையிலான கட்சியின் ஆட்சியைக் கவிழ்த்து, ராணுவம் ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றியது.
மேலும், ஆங் சான் சூச்சி, மியான்மரின் அதிபர் யு வின் மியிண்ட் மற்றும் முக்கியத் தலைவர்களையும் வீட்டுக் காவலில் ராணுவம் வைத்தது. ஆங் சான் சூச்சி, முறைகேடாக வாக்கி டாக்கிகளை இறக்குமதி செய்ததாக ராணுவம் குற்றம் சாட்டியது. மேலும், அவரை பிப்ரவரி 15 வரை வீட்டுக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆங் சான் சூச்சி விடுதலை செய்யப்பட வேண்டும் என்று ஐ.நா. உள்ளிட்ட அமைப்புகள் கேட்டுக் கொண்டுள்ளன. இந்த நிலையில் நியூசிலாந்து அரசு மியான்மருடனான உறவைத் துண்டித்துள்ளது.
இதுகுறித்து நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறும்போது, “ மியான்மரில் நடப்பதை சர்வதேச சமூகம் கண்டிக்கிறது. மியான்மரில் நடப்பதைப் பார்த்து நியூசிலாந்து மக்கள் கவலை அடைந்துள்ளனர். நாங்கள் மியான்மருடனான அரசியல் மற்றும் ராணுவ உறவைத் துண்டித்துக் கொள்கிறோம். நியூசிலாந்தில் இருந்து என்ன செய்ய முடியுமோ அதனைச் செய்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
மியான்மரில் ராணுவம் ஆட்சியைப் பிடித்ததற்குப் பிறகு சர்வதேச அளவில் அந்நாட்டின் மீது எடுக்கப்பட்ட முதல் நடவடிக்கை இதுவாகும்.