மியான்மரில் தொடரும் மக்கள் போராட்டம்

மியான்மரில் தொடரும் மக்கள் போராட்டம்
Updated on
1 min read

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில், “ மியான்மரில் கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவு பெரிய போராட்டத்தில் அந்நாட்டு மக்கள் ஈடுபட்டு உள்ளனர். தொடர்ந்து இரண்டாவது நாளாக பெரிய அளவிலான போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

எங்களுக்கு ராணுவ ஆட்சி வேண்டாம், எங்களுக்கு ஜனநாயகம் வேண்டும் என்று மக்கள் தொடர்ந்து முழுக்கமிட்டனர். இப்போராட்டத்தில் சிறுவர், சிறுமியரும் கலந்து கொண்டுள்ளனர்” என்று செய்தி வெளியிட்டுள்ளன.

ராணுவ தரப்பு இன்னும் எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை. இந்த நிலையில் இணையதளங்கள் நேற்று முதல் மியான்மரில் செயல்பட தொடங்கியுள்ளன.

நடந்தது என்ன?

மியான்மரில் கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி, புதிய அரசை ஏற்க ராணுவம் மறுத்தது. இது தொடர்பாக மியான்மர் அரசுக்கும் ராணுவத்துக்கும் இடையே மோதல் நீடித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் ஆங் சான் சூச்சி தலைமையிலான கட்சியின் ஆட்சியைக் கவிழ்த்து, ராணுவம் ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றியது.

மேலும் ஆங் சான் சூச்சி, மியான்மரின் அதிபர் யு வின் மியிண்ட் மற்றும் முக்கியத் தலைவர்களையும் வீட்டுக் காவலில் ராணுவம் வைத்தது. ஆங் சான் சூச்சி, முறைகேடாக வாக்கி டாக்கிகளை இறக்குமதி செய்ததாக ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், அவரை பிப்ரவரி 15 வரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆங் சான் சூச்சி விடுதலை செய்யப்பட வேண்டும் என்று ஐ.நா. உள்ளிட்ட அமைப்புகள் கேட்டுக் கொண்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in