

நைஜீரியாவின் போகோ ஹராம் என்ற தீவிரவாத அமைப்பு ஐஎஸ் தீவிரவாத அமைப்பை விடவும் பயங்கரமானது என்று உலகப் பயங்கரவாத குறியீடு தரவு ஒன்று தெரிவித்துள்ளது.
2014-ம் ஆண்டில் மட்டும் போகோ ஹராம் தீவிரவாதத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 6,644, மாறாக ஐஎஸ் தீவிரவாதத்துக்கு பலியானோர் எண்ணிக்கை இதே ஆண்டில் 6,073.
மார்ச் மாதம் ஐஎஸ் அமைப்புடன் கூட்டணி வைத்துக் கொள்வதாக போகோ ஹராம் அறிவித்திருந்தது. மேற்கு ஆப்பிரிக்காவின் ஐஎஸ் பிரிவு என்றே தங்களை போகோ ஹராம் அதன் பிறகு அழைத்துக் கொள்ளத் தொடங்கியது.
புதன்கிழமையன்று அகதிகள் நெரிசலாக வாழும் யோலா பகுதியில் போகோ ஹராம் தற்கொலைப் படையைச் சேர்ந்த தீவிரவாதி குண்டுகளை வெடிக்கச் செய்ததில் 34 பேர் பலியாகியுள்ளனர்.
நைஜீரியாவிலேயே வளர்ந்த இந்த போகோ ஹராம் தீவிரவாதம் 6 ஆண்டுகளில் சுமார் 20,000 பேர்களை கொன்று குவித்துள்ளது. சுமார் 20 லட்சம் பேர் தங்கள் உடமைகளை இழந்து அகதிகளாகப் புலம் பெயர்ந்துள்ளனர்.
நைஜீரியாவின் ஆண்டு ராணுவ பட்ஜெட் 5 பில்லியன் டாலர்களாகும். இருந்த போதிலும் நைஜீரிய ராணுவத்தினரை விட அதிநவீன ஆயுதங்களை போகோ ஹராம் தீவிரவாதிகள் வைத்திருப்பதற்குக் காரணம் அங்கு நிலவி வரும் கடுமையான ஊழலே என்று சாடப்பட்டு வருகிறது.