

கனடா நாட்டின் 23-வது பிரதமராக விடுதலை கட்சியைச் சேர்ந்த ஜஸ்டின் ட்ருடியூ (43) நேற்று முன்தினம் பதவியேற்றுக் கொண்டார்.
ஒட்டாவா நகரில் உள்ள ஆளுநர் மாளிகையில் (ரிடியூ அரங்கு) நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜஸ்டினுக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பிரெஞ்சு மொழி ஆசிரியராக பணியாற்றிய இவர், கடந்த 2008-ம் ஆண்டு முதல் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தார்.
43 வயதான ஜஸ்டின், கனடா வரலாற்றில் 2-வது இளம் வயது பிரதமர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இவரது தந்தை பீரே ட்ருடியூ கடந்த 1968 முதல் 1984 வரை (சிறிது இடைவெளி விட்டு) பிரதமராக பதவி வகித்துள்ளார்.
பதவியேற்றுக்கொண்ட பிறகு ஜஸ்டின் கூறும்போது, “இது உண்மையான மாற்றத்துக்கான நேரம் என்று நாடு முழுவதும் உள்ள மக்கள் வாழ்த்துச் செய்தி அனுப்பி உள்ளனர். என் மீதும் எனது அமைச்சர்கள் மீதும் அவர்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி” என்றார்.
இந்த ஆண்டு இறுதிக்குள் 25 ஆயிரம் சிரியா அகதிகளுக்கு மறுவாழ்வு அளிக்கப்படும் என்றும் இராக் மற்றும் சிரியாவில் ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு எதிரான போரிலிருந்து கனடா படிப்படியாக விலகும் என்றும் புதிய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் 19-ம் தேதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் விடுதலை கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இதையடுத்து பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சியின் 10 ஆண்டு ஆட்சி முடிவுக்கு வந்தது.