நான் இன்னமும் விவசாயிகளின் போராட்டத்தை ஆதரிக்கிறேன்: கிரெட்டா மீண்டும் ட்வீட்

நான் இன்னமும் விவசாயிகளின் போராட்டத்தை ஆதரிக்கிறேன்: கிரெட்டா மீண்டும் ட்வீட்
Updated on
1 min read

நான் இன்னமும் விவாசயிகளின் போராட்டத்தை ஆதரிக்கிறேன் என்று காலநிலைச் செயற்பாட்டாளர் கிரெட்டா துன்பெர்க் தெரிவித்துள்ளார்.

புதிய வேளாண் சட்டங்களை ரத்துசெய்யக் கோரி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் இரு மாதங்களுக்கும் மேலாக டெல்லி எல்லைகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக நடைபெற்ற அனைத்துச் சுற்றுப் பேச்சுவார்த்தைகளும் தோல்வியடைந்தன.

குடியரசு தினத்தன்று, டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தப்பட்டபோது ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து டெல்லி திக்ரி, சிங்கு எல்லைகள், உத்தரப் பிரதேசம் மீரட் எக்ஸ்பிரஸ் சாலை, காஜியாபாத் எல்லையில் விவசாயிகள் போராடும் இடத்தில் ஏராளமான போலீஸார், துணை ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லி எல்லையில் பல்வேறு சாலைகளும் மூடப்பட்டப்பட்டன. இணையதளங்களும் முடக்கப்பட்டன. இச்சம்பவம் இந்தியா முழுவதும் கடுமையான அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சர்வதேச அளவில் விவசாயிகளுக்கு ஆதரவாகக் குரல் ஒலிக்கத் தொடங்கியது. பாடகி ரிஹானாவும், சூழலியல் ஆர்வலரான கிரெட்டா துன்பெர்க்கும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து இந்திய பிரபலங்கள் பலரும், 'நாங்கள் ஒற்றுமையாக உள்ளோம், வெளிநாட்டினர் யாரும் இந்தியாவின் உள் விவகாரங்களில் தலையிட வேண்டாம்' என்று சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் கிரெட்டா துன்பெர்க்கின் கருத்து வன்முறையைத் தூண்டும் வகையில் இருப்பதாக டெல்லி போலீஸார் அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து கிரெட்டா துன்பெர்க் தனது ட்விட்டர் பக்கத்தில், “நான் இன்னமும் விவசாயிகளின் அமைதியான போராட்டத்தை ஆதரிக்கிறேன். எந்தவொரு வெறுப்பும், அச்சுறுத்தல்களும், மனித உரிமை மீறல்களும் ஒருபோதும் அதை மாற்றாது” என்று பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in