Published : 05 Feb 2021 03:15 AM
Last Updated : 05 Feb 2021 03:15 AM

110 கோடி கரோனா தடுப்பூசி வாங்க சீரம் நிறுவனத்துடன் ஐ.நா. ஒப்பந்தம்: 100 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டம்

புனேவைச் சேர்ந்த சீரம் நிறுவனத்திடம், 110 கோடி கரோனா தடுப்பூசி வாங்க ஐக்கிய நாடுகள் சபை, யுனிசெப் ஒப்பந்தம் செய்துள்ளன. இதன்படி கரோனா தடுப்பூசி கோவிஷீல்டை தயாரித்து சீரம் அளிக்க உள்ளது. மொத்தம் 110 கோடி தடுப்பூசி குப்பிகளை இந்நிறுவனம் தயாரித்து அளிக்கும் வகையிலும் நீண்ட கால அடிப்படையிலும் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இவை 100 நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

புனேவைச் சேர்ந்த சீரம் நிறுவனம், ஆக்ஸ்போர்டு பல்கலை மற்றும் அஸ்ட்ரா ஜெனிகா ஆகியவற்றின் ஒத்துழைப்போடு கரோனாவுக்கான தடுப்பு ஊசியை கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரிக்கிறது. இந்தியாவில் இந்த தடுப்பு ஊசிகள் போடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பிற நாடுகளுக்கும் இந்த தடுப்பு ஊசி மருந்தை அனுப்ப ஐக்கிய நாடுகள் சபையும், யுனிசெப் அமைப்பும் திட்டமிட்டு இந்நிறுவனத்துடன் நீண்ட கால அடிப்படையில் ஒப்பந்தம் செய்துள்ளது.

இதேபோல அமெரிக்காவின் நோவாவாக்ஸ் நிறுவனத்துடனும் கரோனா தடுப்பு ஊசி மருந்தை வாங்குவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக யுனிசெப் அமைப்பின் செயல் இயக்குநர் ஹென்ரிட்டா ஃபோர் தெரிவித்துள்ளார். ஏழை நாடுகளுக்கும் தடுப்பு ஊசியை வழங்கும் வகையில் ஒரு தடுப்பு ஊசி மருந்து விலை 3 அமெரிக்க டாலர் (சுமார் ரூ.225) என்ற அளவில் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார். தடுப்பு ஊசி வாங்குவதற்கு தற்போது ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இவை எந்தெந்த நாடுகளுக்கு எத்தனை குப்பிகள் அனுப்பப்படுகிறது என்ற விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் என்று அவர் கூறினார்.

145 நாடுகளில் உள்ள சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பு ஊசி மருந்துகள் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கரோனா தடுப்பு ஊசி போடும் விழிப்புணர்வை யுனிசெஃப் மேற்கொண்டுள்ளது. தடுப்பு ஊசி மருந்துகளை சேமித்து வைக்கும் குளிர்ப்பதன கிடங்கு வசதிகளை ஏற்படுத்திய பிறகு இந்த மருந்துகளை அனுப்புவது தொடர்பாக சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

பைசர் நிறுவனம் ஏற்கெனவே 12 லட்சம் தடுப்பு ஊசி மருந்துகளை 18 நாடுகளுக்கு முதல் காலாண்டில் அனுப்பியுள்ளது. ஓராண்டில் மொத்தம் 4 கோடி தடுப்பு ஊசி குப்பிகளைத் தயாரித்து அனுப்ப முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x