Published : 04 Feb 2021 10:27 AM
Last Updated : 04 Feb 2021 10:27 AM

சந்தைகளின் செயல்திறனை மேம்படுத்தும்; தனியார் முதலீட்டை ஈர்க்கும்: விவசாய சட்டம் குறித்து அமெரிக்கா கருத்து

வாஷிங்டன்

விவசாயச் சட்டம் மற்றும் விவசாயிகள் போராட்டம் பற்றி கருத்து தெரிவித்துள்ள அமெரிக்கா, இந்தியாவின் சந்தைகளின் செயல்திறனை மேம்படுத்துவதற்கும், தனியார் முதலீட்டை ஈர்க்கும் நடவடிக்கைகளையும் வரவேற்பதாக அமெரிக்க கூறியுள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 2 மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குடியரசு தினத்தில் விவசாயிகள் சார்பில், டெல்லியில் நடந்த டிராக்டர் பேரணியில் வன்முறை ஏற்பட்டது.

டெல்லி செங்கோட்டைக்குள் நுழைந்த விவசாயிகள் தேசியக் கொடி ஏற்றும் இடத்தில், சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி பேசும் இடத்தில் சீக்கிய மதக் கொடியை ஏற்றினர். டெல்லியில் நடந்த வன்முறைச் சம்பவங்களில் 300-க்கும் மேற்பட்ட போலீஸார் காயமடைந்தனர் என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சர்வதேச அளவில் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் ஒலிக்க தொடங்கியுள்ளது. பலர் விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் பார்வையாளர்களாக இருக்கலாம், பங்கேற்க முடியாது என கிரிக்கெட் பிரபலம் சச்சின் கூறி உள்ளார்.

இதேபோன்று பல்வேறு திரை பிரபலங்களும், விளையாட்டு துறையினரும், வெளிநாட்டு பிரபலங்களின் தலையீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் விவசாய சட்டம் மற்றும் விவசாயிகள் போராட்டம் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை கருத்து தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:

அமைதியான முறையில் நடைபெறும் போராட்டங்களை, வளரும் ஜனநாயகத்தின் அடையாளமாக நாங்கள் அங்கீகரிக்கிறோம். இந்திய உச்ச நீதிமன்றமும் இதையே கூறி உள்ளது.

இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும். இந்தியாவின் சந்தைகளின் செயல்திறனை மேம்படுத்துவதற்கும், தனியார் முதலீட்டை ஈர்க்கும் நடவடிக்கைகளையும் அமெரிக்கா வரவேற்கிறது.

இன்டர்நெட் உட்பட தகவல் தொடர்புகள் தடையின்றி கிடைப்பது கருத்துச் சுதந்திரத்திற்கு அடிப்படையானது மற்றும் வளர்ந்து வரும் ஜனநாயகத்தின் ஒரு அடையாளமாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x