இயற்கைப் பேரிடர்களில் 90% வானிலை சார்ந்ததே: ஐநா அறிக்கை

இயற்கைப் பேரிடர்களில் 90% வானிலை சார்ந்ததே: ஐநா அறிக்கை
Updated on
1 min read

இயற்கைப் பேரிடர்களில் 90% வானிலை மாற்றங்கள் சார்ந்ததே என்றும், அமெரிக்கா, சீனா, இந்தியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா ஆகிய 5 நாடுகள் இயற்கைப் பேரழிவுகளுக்கு அதிகம் ஆளாகி வருவதாகவும் ஐநா அறிக்கை தெரிவிக்கிறது.

கடந்த 20 ஆண்டுகளில் வெள்ளம், புயல்கள், வெப்ப அலைகள், வறட்சி, மற்றும் பிற வானிலை சார்ந்த பேரழிவுகளே அதிகம் என்கிறது அந்த அறிக்கை.

'வானிலை சார்ந்த பேரழிவுகளில் மனித இழப்புகள்' என்ற ஐநா ஆதரவு அறிக்கையில், 1995-ம் ஆண்டு முதல் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் வானிலை தொடர்பான பேரழிவுகளில் சிக்கி பலியாகியுள்ளனர். சுமார் 4.1 பில்லியன் மக்கள் காயமடைந்தனர் அல்லது வீடு வாசல்களை இழந்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

இதில் அதிக கரியமில வாயுவை வெளியேற்றி வரும் அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய நாடுகளும் பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா ஆகிய நாடுகளும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

பேரிடர் பாதிப்பு குறைப்பு குறித்த ஐநா அலுவலகம் வெளியிட்ட இந்த அறிக்கை, தரவுகளில் இடைவெளிகள் இருப்பதாகக் கூறுகிறது. தரவுகளில் 35% மட்டுமே பொருளாதார இழப்புகள் பற்றி பதிவுகளைக் கொண்டுள்ளது என்கிறது ஐநா அலுவலகம்.

பூகம்பம், சுனாமி உள்ளிட்ட பேரிடர்களினால் ஏற்படும் பொருளாதார இழப்புகள் ஆண்டுக்கு 250 பில்லியன் டாலர்கள் முதல் 300 பில்லியன் டாலர்கள் வரை இருக்கலாம் என்கிறது ஐநா அலுவலகம்.

பேரிடர் தாக்கங்களில் ஆசியாவின் பாதிப்பு மிக அதிகம். 3,32,000 உயிரிழப்புகளும், சுமார் 3.7 பில்லியன் மக்கள் பாதிக்கப்படுவதாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2008-ம் ஆண்டு மியான்மரைத் தாக்கிய நர்கீஸ் புயல் காற்று பாதிப்பு உட்பட ஆசியாவில் இயற்கைப் பேரிடர்களுக்கு 1,38,000 பேர் பலியாகியுள்ளனர்.

அதே போல் 1995-2015 ஆண்டுகளுக்கிடையே வானிலை தொடர்பான பேரிடர் சம்பவங்களில் 47% வெள்ளம் மட்டுமே பங்களிப்பு செய்துள்ளது. இந்தக் காலக்கட்டத்தில் 2.3 பில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டு, சுமார் 1,57,000 பேர் பலியாகியுள்ளனர்.

புயலுக்கு இதே காலக்கட்டத்தில் 242000 பேர் பலியாகியுள்ளனர். வெப்ப அலைகளுக்கு 1,48,000 பேர்களும், தீவிர வானிலை மாற்ற நிகழ்வுகளில் 164000 பேர்க்ளும் பலியாகியுள்ளனர்.

வறட்சிக்கு அதிகம் பாதிக்கப்பட்ட கண்டம் ஆப்பிரிக்க கண்டமே. கிழக்கு ஆப்பிரிக்காவில் மட்டும் கடந்த 20 ஆண்டுகளில் 77 வறட்சிகள் ஏற்பட்டுள்ளன.

இவ்வாறு ஐநா அறிக்கை தெரிவிக்கின்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in