

கரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளில் இருந்து பயணிகள் வருவதற்குத் தடை விதித்து சவுதி அரேபியா உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து, லெபனான், துருக்கி, அமெரிக்கா, ஸ்வீடன், பிரேசில், பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து, அர்ஜென்டினா, இத்தாலி, அயர்லாந்து, போர்ச்சுகல், தென் ஆப்பிரிக்கா, இந்தியா, இந்தோனேசியா, பாகிஸ்தான், ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்து வருவோருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த உத்தரவில் இருந்து அரசுத் தரப்பில் அலுவல்ரீதியாக வரும் வெளிநாட்டு அதிகாரிகள், தூதரக அதிகாரிகள், சவுதி அரேபிய மக்கள், மருத்துவர்கள் ஆகியோருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடை உத்தரவு இன்று முதல் அமலாகிறது என்று சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது.
தி நியூஸ் இன்டர்நேஷனல் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், “சவுதி அரேபிய மக்கள், மருத்துவர்கள், அரசு உயர் அதிகாரிகள், அவர்கள் குடும்பத்தினர் யாரேனும் தடை செய்யப்பட்ட 20 நாடுகளுக்கு கடந்த 14 நாட்களுக்கு முன் சென்று வந்திருந்தாலோ அல்லது அந்த நாட்டில் விமானத்தில் இறங்கி வேறு விமானம் மாறியிருந்தாலோ அரசின் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் கரோனா வைரஸால் 3.68 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டனர். 6,383 பேர் உயிரிழந்தனர் என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத் தகவல் குறிப்பிடுகிறது.