முதல் முறையாக உள்நாட்டிலேயே பயணிகள் விமானம் தயாரித்து சீனா சாதனை

முதல் முறையாக உள்நாட்டிலேயே பயணிகள் விமானம் தயாரித்து சீனா சாதனை
Updated on
1 min read

போயிங், ஏர்பஸ் ஆகிய மிகப்பெரிய விமான உற்பத்தி நிறுவனங்களின் ஆதிக்கத்துக்கு சவால் விடுக்கும் விதமாக சீனா உள்நாட்டிலேயே பெரிய பயணிகள் விமானத்தை முதல் முறையாக உற்பத்தி செய்துள்ளது.

இதன் மூலம் சீனாவின் கனவு நிறைவேறியுள்ளதாக சீன வர்த்தக விமான கார்ப்பரேஷன் தலைவர் ஜின் ஸுவாங்லாங் தெரிவித்தார்.

“சி-919 என்ற இந்த விமானம் ஒரு குறிப்பிடத்தகுந்த மைல்கல் ஆகும். இது சீனாவின் முதல் உள்நாட்டு தயாரிப்பு பயணிகள் விமானம் ஆகும்” என்றார்.

158 பேர் பயணம் செய்யக்கூடிய இந்த விமானம் சுமார் 4,075 கிமீ தூரம் செல்லும். 2016-ம் ஆண்டு இதன் வெள்ளோட்டம் நடைபெறுகிறது.

வர்த்தகப் போக்குவரத்துக்கு இந்த விமானம் அனுமதி பெற்ற பிறகு மேம்படுத்தப்பட்ட ஏர்பஸ் 320 மற்றும் போயிங்கின் புதிய தலைமுறை 737 விமானம் ஆகியவற்றுடன் போட்டியில் இறங்குகிறது.

சீன வான்வழித் துறை நிபுணர்களுக்கு அதிபர் ஸீ ஜின்பிங் வாழ்த்து தெரிவித்ததோடு, முதல் முறையாக இந்த விமானம் பறப்பதற்கு கவனமான முறையில் ஏற்பாடு செய்ய உத்தரவிட்டுள்ளார்.

அதாவது பாதுகாப்பு மற்றும் தரம் மிக முக்கியம் என்று அறிவுறுத்தியுள்ளார் அதிபர் ஜின்பிங்.

உலகின் மிகப்பெரிய பயணிகள் விமான சந்தையை உடையது சீனா. அதன் 21 மிகப்பெரிய விமான நிலையங்கள் மூலம் ஆண்டுக்கு சுமார் 1 கோடி பயணிகளின் பயணத்தை தீர்மானிக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in