இந்தியாவுடன் நிபந்தனையற்ற பேச்சுக்குத் தயார்: பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் அறிவிப்பு

இந்தியாவுடன் நிபந்தனையற்ற பேச்சுக்குத் தயார்: பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் அறிவிப்பு
Updated on
1 min read

எவ்வித நிபந்தனையும் இன்றி இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது என்று அந்த நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

தெற்கு ஐரோப்பாவில் மத்திய தரைகடலில் அமைந்துள்ள மால்டா தீவு நாட்டில் காமன்வெல்த் மாநாடு நடைபெறுகிறது. இதில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பங்கேற்றுள்ளார்.

இதையொட்டி பாகிஸ்தானின் ஜியோ தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

"இந்தியா, ஆப்கானிஸ்தான் உட்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் சுமுக உறவைப் பேண பாகிஸ்தான் விரும்புகிறது. தெற்காசியப் பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்த இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை எவ்வித நிபந்தனைக்கும் உட்பட்டதாக இருக்கக்கூடாது.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலை பாகிஸ்தான் கடுமையாகக் கண்டிக்கிறது. தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு என்ற வகையில் பிரான்ஸின் வலியை எங்களால் உணர்ந்து கொள்ள முடிகிறது.

காமன்வெல்த் மாநாட்டின் ஒருபகுதியாக பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூனை சந்தித்துப் பேசினேன். தீவிரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை கேமரூன் பாராட்டினார்.

மேலும் பாகிஸ்தான், பிரிட்டன் இடையே வர்த்தக உறவை வலுப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ரஷ்யாவின் உஃபா நகரில் கடந்த ஜூலையில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற்றது. இதில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபும் சந்தித்துப் பேசி கூட்டறிக்கை வெளியிட்டனர்.

அதன்படி இருநாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் நிலையிலான பேச்சுவார்த்தை கடந்த ஆகஸ்டில் டெல்லியில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர்களை சந்திப்பதில் பாகிஸ்தான் தரப்பு உறுதியாக இருந்தது. இதை இந்தியா ஏற்க மறுத்துவிட்டது. இதனால் கடைசி நேரத்தில் பேச்சுவார்த்தையை பாகிஸ்தான் ரத்து செய்துவிட்டது.

இந்தப் பின்னணியில் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக நவாஸ் ஷெரீப் இப்போது அழைப்பு விடுத்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in