மியான்மரில் ராணுவ புரட்சி- ஆங் சான் சூச்சி சிறைபிடிப்பு

மியான்மரில் ராணுவ புரட்சி- ஆங் சான் சூச்சி சிறைபிடிப்பு
Updated on
1 min read

மியான்மரில் ராணுவ புரட்சி ஏற்பட்டு ஆங் சான் சூச்சி சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 1962 முதல் 50 ஆண்டுகளுக்கும் மேலாக மியான்மரில் ராணுவ ஆட்சி நடைபெற்றது. இதை எதிர்த்து தேசிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஆங் சாங் சூச்சி சுதந்திர போராட்டத்தை வழிநடத்தினார். சுமார் 21 ஆண்டுகள் அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

மக்களின் போராட்டம் காரணமாக கடந்த 2015-ல் அங்கு பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில்ஆங் சான் சூச்சியின் கட்சி அமோக வெற்றி பெற்றது. அவரின் மகன்கள் வெளிநாட்டு குடியுரிமை பெற்றிருப்பதால் அவரால் அதிபர் பதவியேற்க முடியவில்லை. இதைத் தொடர்ந்து சூகிக்கு நெருக்கமான டின் கியாவ் (71) அதிபர் பதவியேற்றார். நாட்டின் தலைமை ஆலோசகராக ஆங் சாங் சூச்சி பொறுப்பேற்றார்.

ராக்கைன் மாநிலத்தில் ராணுவத் தளபதிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளால் 7.40 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர். சூச்சிக்கு இருந்த ஜனநாயகப் பிம்பமானது இந்த நடவடிக்கைகளை அவர் வெளிப்படையாக ஆதரித்ததன் மூலம் சிதைந்துபோனது.

இந்தநிலையில் கரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 642 இடங்களுக்கு அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூச்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி உள்பட 90-க்கும் மேற்பட்ட கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதாக ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயக கட்சி அறிவித்தது.

இந்தநிலையில் ஆங் சான் சூச்சி ராணுவத்தினால் சிறைபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மியான்மரில் ஆங் சான் சூச்சி உள்ளிட்ட தலைவர்கள் ராணுவத்தினால் சிறைபிடிக்கப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in