

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க, உலகில் உள்ள நினைவுச் சின்னங்களை மின் விளக்குகளால் அலங்கரித்து பிரச்சாரத்தை தொடங்கியது ஐ.நா.
பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்க வேண்டும் என்று ஐ.நா. வலியுறுத்தி வருகிறது. இதற்கான செயல்களில் இறங்க வேண்டும் என்று வலியுறுத்தி உலகம் முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினமான நேற்று உலகம் முழுவதும் தனது பிரச்சாரத்தை ஐ.நா. தொடங்கியது.
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்க உலகம் முழுவதும் பேரணிகள், கால்பந்து போட்டிகள், பள்ளிகளில் விவாதங்கள், உலகம் முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான நினைவுச் சின்னங்களை மின் விளக்குகளால் அலங்கரித்தல் உட்பட பல்வேறு வழிகளில் ‘ஆரஞ்ச் தி வேர்ல்டு’ என்ற பெயரில் தீவிர பிரச்சாரம் செய்ய ஐ.நா. நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, இந்தியாவில் தலைநகர் டெல்லியில் உள்ள ‘இண்டியா கேட்’ ஆரஞ்ச் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்படுகிறது. அதேபோல் டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்களின் முக்கிய இடங்களில், ‘பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு முடிவு கட்டுங்கள்’ என்ற பிரச்சார வாசகங்களுடன் பதாகைகள் வைக்கப்பட உள்ளன.
இதுகுறித்து ஐ.நா.வின் பெண்கள் நலப் பிரிவு நிர்வாக இயக்குநரும் செகரட்டரி ஜெனரலுமான பும்ஸைல் லம்போ நகுகா நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘உலகளவில் பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளன. உலகளவில் மூன்றில் ஒரு பெண் வன்முறையால் பாதிக்கப்படுகிறார். மனித உரிமைகளை மீறிய அந்த செயல்களுக்கு முடிவு கட்ட வேண்டும். பாலின பாகுப்பாட்டின் அடிப்படையில் வன்முறைகள் நிகழக் கூடாது. ஆண்-பெண் சமத்துவம் உருவாக வேண்டும்’’ என்றார்.
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்கும் ஐ.நா.வின் பிரச்சாரம் நேற்று தொடங்கியது. இந்த பிரச்சாரம், சர்வதேச மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10-ம் தேதி வரை நீடிக்க உள்ளது. இந்த 16 நாட்களிலும் 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் 450 நிகழ்ச்சிகளை நடத்த ஐ.நா. திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.