

'கேர்ள் பிரெண்ட்' ஒருவர் பெயரில் பேஸ்புக் பக்கத்தை உருவாக்கி, அதில் அவரது புகைப்படங்களை அவரது அனுமதி இல்லாமல் பதிவேற்றிய வழக்கில் பாகிஸ்தான் நீதிமன்றம் ஒருவருக்கு ஜாமீன் வழங்க மறுத்துள்ளது.
2 மாதங்களுக்கு முன்பாக முகமது முனிர் என்பவரை பாகிஸ்தான் விசாரணை அதிகாரிகள், சைபர் கிரைம் பிரிவில் கைது செய்தனர். அதாவது அவர் பெண் ஒருவரை 'கேர்ள் பிரெண்ட்' என்று கூறிக்கொண்டு, அவருக்காக பேஸ்புக் பக்கம் ஒன்றைத் தொடங்கி, அதில் அவரது புகைப்படங்களையும் அனுமதியின்றி பதிவேற்றினார் என்ற புகாரின் அடிப்படையில் முனிர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட முகமது முனிரின் ஜாமின் மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, முனிரின் வழக்கறிஞர் புகார் அளித்த பெண்ணை முனிரின் ‘கேர்ள் பிரெண்ட்’ என்று குறிப்பிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “இஸ்லாமிய சமூகத்தில் கேர்ள் பிரெண்ட் என்ற கலாச்சாரம் கிடையாது, இது மேற்கத்திய கருத்தாக்கம்” என்று கூறி ஜாமீன் மனுவை நிராகரித்ததோடு, விசாரணை அதிகாரிகள் 14 நாட்களுக்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
முன்னதாக பாதிக்கப்பட்ட பெண் ஷாகுஃப்தா பெடரல் விசாரணை அதிகாரிகளிடம் முனிரின் செயல் குறித்து புகார் அளித்திருந்தார்.