

எகிப்தின் சினாய் பகுதியில் விழுந்த ரஷ்ய விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்படவில்லை, குண்டு வெடிப்பால்தான் அந்த விமானம் சிதறி விழுந்துள்ளது என்று கருப்பு பெட்டிகளை ஆய்வு செய்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே ரஷ்யாவில் இருந்து எகிப்துக்கு இயக்கப்படும் அனைத்து விமான சேவைகளையும் அதிபர் விளாடிமிர் புதின் நேற்று ரத்து செய்தார்.
கடந்த அக்டோபர் 31-ம் தேதி எகிப்தின் ஷரம் அல்-ஷேக் விமான நிலையத்தில் இருந்து 224 பேருடன் ரஷ்யாவின் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு பயணிகள் விமானம் புறப்பட்டது. அந்த விமானம் வானில் பறந்த 22-வது நிமிடத்தில் எகிப்தின் சினாய் பகுதியில் விழுந்தது. இதில் 224 பேரும் உயிரிழந்தனர்.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் விழுந்திருக் கலாம் என்று முதலில் கூறப்பட்டது. இதனிடையே விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஐ.எஸ். அமைப்பு அறிவித்தது. ஆனால் 31 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த விமானத்தை ஐ.எஸ். அமைப்பால் சுட்டு வீழ்த்தியிருக்க முடியாது என்று ரஷ்யா திட்டவட்டமாக மறுத்தது.
இதைத் தொடர்ந்து விமானத்தின் கருப்புப் பெட்டிகள் மீட்கப்பட்டு ரஷ்ய மற்றும் பிரான்ஸ் நிபுணர்கள் அவற்றை ஆய்வு செய்தனர். இதில் ரஷ்ய விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்படவில்லை, வெடிகுண்டு வெடித்ததால்தான் விமானம் சிதறி விழுந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக ரஷ்ய அரசு இதுவரை அதிகாரபூர்வமாக எவ்வித தகவலையும் வெளியிடவில்லை. எனினும் ரஷ்யாவில் இருந்து எகிப்துக்கு இயக்கப்படும் அனைத்து விமான சேவைகளையும் அதிபர் விளாடிமிர் புதின் நேற்று திடீரென ரத்து செய்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக கருப்புப் பெட்டியை ஆய்வு செய்த பிரான்ஸ் நிபுணர் வட்டாரங்கள் ஏஎப்பி செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:
விமானம் வானில் 22 நிமிடங்கள் பறந்துள்ளது. அதுவரை விமானத் தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக தெரியவில்லை, சீராகவே பறந்துள்ளது. ஆனால் திடீரென நடுவானில் விமானம் வெடித்துச் சிதறியுள்ளது. எனவே விமானத்தில் வெடிகுண்டு வெடித்திருக்கலாம் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பிரிட்டிஷ் நாளிதழ் ஒன்று நேற்றுமுன்தினம் வெளியிட்ட செய்தியில், ஷரம் அல்-ஷேக் விமான நிலையத்தில் இருந்து பயணி அல்லது விமான ஊழியர் ஒருவர் வெடிகுண்டை உடன் எடுத்துச் சென்றிருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
பிரிட்டிஷ் உளவுத் துறை வட்டாரங்களை மேற்கோள் காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள் ளது. அமெரிக்க உளவுத் துறை வட்டாரங்களும் இதே கருத்தை தெரிவித்துள்ளன.