

பாகிஸ்தானில் தண்டவாளத்தில் டிக்டாக் செய்த இளைஞர் ரயில் மோதி பலியானார். பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகர் அருகே இருக்கும் பகுதி ஷா காலித்.
இப்பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் ஹம்சா நவீத் (18) என்ற இளைஞர் டிக்டாக் சமூக வலைதளத்தில் பதிவேற்ற பாவனைகள் செய்து கொண்டிருந்தார். அதனை அவரது நண்பர் வீடியோவாகப் பதிவு செய்து கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த ரயில் மோதி நவீத் தூக்கி வீசப்பட்டார். அதிர்ந்துபோன நண்பர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க மீட்புப் படையினர் விரைந்து வந்தனர்.
ஆனால், ஹம்சா நவீத் ஏற்கெனவே இறந்துவிட்டார். போலீஸார் உடலைக் கைப்பற்றி வழக்குப் பதிவு செய்தனர்.
பாகிஸ்தானில் ஃபேஸ்புக், ட்விட்டர், டிக்டாக் போன்ற சமூக வலைதளங்கள் மீதான மோகம் இளைஞர்கள் மத்தியில் சமீபகாலமாக பலமடங்கு அதிகரித்து வருவதாக அந்நாட்டு சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், டிக்டாக் மோகத்தால் 18 வயது இளைஞர் உயிர் பறிபோன சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் டிக்டாக் உள்ளிட்ட பல்வேறு சீன செயலிகளுக்கும் தடை நிலவுகிறது. ஆனால், பாகிஸ்தான் ராணுவம், உட்கட்டமைப்பு என பல்வேறு வகையிலும் சீனாவிடமிருந்து உதவிகளைப் பெற்றுவரும் நிலையில் அந்நாட்டுச் செயலிகளுக்குத் தடை விதிப்பதும் கூட சாத்தியமற்றதாக இருப்பதாக அந்நாட்டு சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.