Last Updated : 23 Jan, 2021 09:40 AM

 

Published : 23 Jan 2021 09:40 AM
Last Updated : 23 Jan 2021 09:40 AM

உருமாறிய கரோனா வைரஸ் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடியது: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் அதிர்ச்சித் தகவல்

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன்: படம் உதவி | ட்விட்டர்.

லண்டன்

பிரிட்டனில் பரவி வரும் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் அதிகமான உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடியது என்று முதல் கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.

பிரிட்டனில் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தெற்கு இங்கிலாந்தில் உள்ள கென்ட் மாகாணத்தில் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ், ஏற்கெனவே இருந்த கரோனா வைரஸ் பரவும் வேகத்தைவிட 70 சதவீதம் வேகமாகப் பரவும் தன்மை கொண்டது என அறியப்பட்டது. அதற்கு ஏற்ப அடுத்த சில வாரங்களில் பிரிட்டனில் கரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்தது.

இதையடுத்து, பிரிட்டனில் டிசம்பர் மாத நடுப்பகுதியில் நாடு முழுவதும் மீண்டும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. இதனால் கிறிஸ்துமஸ், புத்தாண்டுக் கொண்டாட்டங்களைக் குறைத்துக் கொள்ளவும் மக்களுக்கு பிரிட்டன் அரசு அறிவுறுத்தியது.

பிரிட்டனில் பரவிய உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் பாதிப்பைப் பார்த்து ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, இந்தியா, வளைகுடா நாடுகளும் பிரிட்டனுக்கு விமானப் போக்குவரத்தை நிறுத்தின.

இதற்கிடையே கரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்தும் வகையில் பைஸர் தடுப்பூசியை மக்களுக்குச் செலுத்த பிரிட்டன் அரசு அனுமதியளித்தது. உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் தீவிரத்தைப் பார்த்து ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பு மருந்தையும் மக்களுக்குச் செலுத்த பிரிட்டன் சுகாதாரத்துறை அனுமதி அளித்தது.

இந்நிலையில் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் குறித்து அறிவியல் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில், அது அதிகமான உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடியது எனத் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

''பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் அதிகமான உயிரிழப்பை மக்களுக்கு ஏற்படுத்தக்கூடியது என புள்ளிவிவரங்களில் இருந்து நடத்தப்பட்ட முதல் கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆனால், பிரிட்டனில் மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் பைஸர், ஆக்ஸ்போர்ட் நிறுவனங்களின் தடுப்பூசிகள் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸுக்கு எதிராக வீரியமாகச் செயல்பட்டு வருகின்றன.

இந்த உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் முதலில் தென் கிழக்கு இங்கிலாந்தில் உள்ள கென்ட் மாகாணத்தில் கண்டறியப்பட்டது. ஆனால், அடுத்த சில வாரங்களில் இந்த வைரஸ் அதிவேகமாக நாடு முழுவதும் பரவியது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளை ஆய்வு செய்தபோது, ஏற்கெனவே இருக்கும் கரோனா வைரஸ் ஏற்படுத்தும் பாதிப்பைவிட கூடுதல் பாதிப்பையும் உயிரிழப்பையும் ஏற்படுத்தக்கூடியது எனத் தெரியவந்தது.

அதேசமயம், பிரிட்டன் அரசு மக்களுக்குச் செலுத்திவரும் இரு தடுப்பூசிகளும் பழைய மற்றும் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸுக்கு எதிராக வீரியமாகச் செயல்பட்டு வருகின்றன என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆதலால், உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். ஏற்கெனவே இருந்த கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் 1000 பேரில் 10 பேர் உயிரிழந்திருந்தால், புதிய உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸால் 13 பேர் உயிரிழக்க நேரிடும்.

ஏற்கெனவே தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், கரோனாவில் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் ஆகியோருக்கு உடலில் புதிய எதிர்ப்பு சக்தி உருவாகியிருக்கும். அவர்களுக்கு உருமாற்றம் அடைந்த வைரஸால் பாதிப்பு ஏற்படுவது குறைவாக இருக்கும். இதுவரை பிரிட்டனில் 54 லட்சம் பேருக்கு ஆக்ஸ்போர்டு, பைஸர் தடுப்பூசி மருந்துகளின் முதல் டோஸ் போடப்பட்டுள்ளது''.

இவ்வாறு போரிஸ் ஜான்ஸன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x