

அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் கடந்த 20-ம் தேதி பதவியேற்றுக் கொண்டார். துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் இந்தியாவின் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். மேலும், அமெரிக்க வரலாற்றில் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண். இதுகுறித்து அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை பத்திரிகை தொடர்பு துறை செயலாளர் ஜென் சகி நேற்று கூறியதாவது:
நீண்ட காலமாக உள்ள அமெரிக்க - இந்திய உறவை அதிபர் ஜோ பைடன் மதிக்கிறார். அமெரிக்க துணை அதிபராக பெண் ஒருவரை தேர்ந்தெடுத்துள்ளனர். துணை அதிபராக அவருடைய வரலாற்று சிறப்புமிக்க தொடக்கம், அமெரிக்க - இந்திய உறவை மேலும் பலப்படுத்தும்.
அதிபர் ஜோ பைடன் இந்தியாவுக்குப் பல முறை பயணம் மேற்கொண்டிருக்கிறார். நீண்ட காலமாகவும் வெற்றிகரமாகவும் உள்ள இரு நாட்டு உறவைத் தொடர பைடன் விரும்புகிறார்.
இவ்வாறு ஜென் சகி கூறினார்.