சிரியாவில் அதிபர் தேர்தல் வாக்குப் பதிவு

சிரியாவில் அதிபர் தேர்தல் வாக்குப் பதிவு
Updated on
1 min read

சிரியாவில் அதிபர் தேர்தல் வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் தற்போதைய அதிபர் பஷார் அல்-அஸாத் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகத் தெரிகிறது.

சிரியாவில் கடந்த 40 ஆண்டுகளாக பஷார் அல்-அஸாத் குடும்பத்தினரின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதை எதிர்த்து 2011-ல் பெரும் கிளர்ச்சி ஏற்பட்டது. அதன்பின் சுமார் 3 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த நாட்டில் உள்நாட்டுப் போர் நீடித்து வருகிறது.

பஷார் அல்-அஸாத் வெற்றி உறுதி

இந்நிலையில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அதிபர் தேர்தல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபர் பஷார் அல்-அஸாத் உள்பட 3 பேர் களத்தில் உள்ளனர்.

முக்கிய எதிர்க்கட்சிகள் தேர்தலைப் புறக்கணித்துள்ள நிலையில் அதிபர் பஷார் அல்-அஸாத் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். அவர் வெற்றி பெற்றால் 3-வது முறையாக அதிபர் பொறுப்பேற்று 7 ஆண்டுகள் பதவியில் நீடிப்பார்.

“இத்தேர்தல் கண்துடைப்பு நாடகம்” என்று அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சவூதி அரேபியா, துருக்கி உள்ளிட்ட நாடுகள் கருத்துத் தெரிவித்துள்ளன.

ரத்தத்தில் வாக்குப் பதிவு

தலைநகர் டமாஸ்கஸில் டாமா ரோஸ் ஹோட்டலில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் சிறிய ஊசி வைக்கப்பட்டிருந்தது. சிலர் அந்த ஊசியை விரலில் குத்தி ரத்தத்தின் மூலம் வாக்குச்சீட்டில் தங்கள் வாக்கைப் பதிவு செய்தனர்.

இதுகுறித்து ஜமுனோய் என்பவர் கூறியபோது, தேசப்பற்றை வெளிப்படுத்தும் வகையில் ரத்தத்தில் எங்கள் வாக்கைப் பதிவு செய்தோம் என்றார். அரசு எதிர்ப்புப் படைகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in