

நாட்டின் ஒற்றுமைக்காகவும், சவால்களைச் சமாளிப்பதற்காகவும் பணியாற்ற இருக்கிறேன் என்று அமெரிக்கத் துணை அதிபராகப் பதவியேற்க உள்ள கமலா ஹாரிஸ் பதிவிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடனும், துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸும் வெற்றி பெற்றனர். அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடனும், துணை அதிபராக கமலா ஹாரிஸும் அமெரிக்க நேரப்படி புதன்கிழமை நண்பகலில் பதவி ஏற்கின்றனர்.
இந்த நிலையில் அமெரிக்கத் துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ''நாளை முதல் நாட்டின் ஒற்றுமைக்காவும், எங்கள் தேசம் எதிர்கொள்ளும் சவால்களைச் சமாளிக்கவும், அமெரிக்காவின் வாக்குறுதியைப் புதுப்பிக்கவும் பணியாற்ற இருக்கிறேன்'' என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், ''சூப்பர் ஹீரோக்களாக வளர வேண்டும் என்று கனவு காணும் அனைத்துச் சிறுமிகளுக்கும், சிறுவர்களுக்கும் என்னிடம் ஒரு செய்தி உள்ளது. சூப்பர் ஹீரோக்கள் நம்மிடையேதான் இருக்கிறார்கள். அவர்கள்தான் ஆசிரியர்கள், மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள்'' என்று கமாலா ஹாரிஸ் பதிவிட்டுள்ளார்.