Last Updated : 20 Jan, 2021 07:01 PM

 

Published : 20 Jan 2021 07:01 PM
Last Updated : 20 Jan 2021 07:01 PM

முஸ்லிம்களுக்கான தடை நீக்கம்; எல்லையில் சுவர் கட்டுவது நிறுத்தம்; இந்தியர்களுக்கு கிரீன் கார்டு: அதிபரானதும் 15 முக்கிய உத்தரவுகளில் ஜோ பைடன் கையொப்பம்

குறிப்பிட்ட முஸ்லிம் நாடுகளில் இருந்து வருவோருக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம், அதிகமான இந்தியர்களுக்கு கிரீன் கார்டு, ஐடி துறையில் அதிகமான விசா வழங்கல், 100 நாட்கள் கட்டாய முகக்கவசம் உள்ளிட்ட 15 முக்கிய உத்தரவுகளில் அதிபரான சில மணி நேரங்களில் ஜோ பைடன் கையொப்பம் இட உள்ளார்.

அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் புதன்கிழமை பதவி ஏற்க உள்ளார். அவர் பதவி ஏற்ற சில மணி நேரங்களில் 15 முக்கிய உத்தரவுகளில் கையொப்பமிட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதில் முக்கியமானது சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் குடிபெயர்ந்து வாழ்ந்துவரும் வெளிநாட்டவர்களுக்குக் குடியுரிமை வழங்கும் மசோதா, கிரீன் கார்டு வழங்குதல் போன்றவையாகும்.

இந்த மசோதாவில் கையொப்பமிட்டு நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டால் கடந்த 8 ஆண்டுகளாகக் குடியுரிமை இல்லாமல் இருக்கும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்களுக்கு மிகப்பெரிய நிம்மதி கிடைக்கும். ஆயிரக்கணக்கான இந்திய தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் கிரீன் கார்டு பெறுவார்கள்.

வெள்ளை மாளிகையின் ஊடகப்பிரிவு அமைச்சராகப் பொறுப்பேற்க இருக்கும் ஜென் சகி கூறியதாவது:

“அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்ற முதல் நாளிலேயே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 15 முக்கிய உத்தரவுகளில் கையொப்பமிட உள்ளார்.

குறிப்பிட்ட முஸ்லிம் நாடுகளில் இருந்து மக்கள் வருவதற்கான தடையை விலக்குதல், பருவநிலை மாறுபாட்டு ஒப்பந்தத்தில் மீண்டும் இணைதல், கரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில் அடுத்த 100 நாட்களுக்கு மக்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிதல், மக்களுக்குப் பொருளாதார உதவி, அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தில் தவறாக எடுக்கப்பட்ட முடிவுகளைத் திரும்பப் பெறுதல் போன்றவை அந்த உத்தரவுகளில் உள்ளன. இதன் மூலம் அமெரிக்கா முன்னோக்கி நகரும், அமெரிக்க மக்களுக்கு அளித்த வாக்குறுதியையும் நிறைவேற்றுவோம்.

உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா ட்ரம்ப் நிர்வாகத்தில் வெளியேறியது. நிதியுதவியையும் நிறுத்தியது. அமெரிக்கா, உலக சுகாதார அமைப்பில் மீண்டும் இணைந்து நிதியுதவி வழங்கும். உலக சுகாதாரக் கூட்டத்திலும் அமெரிக்கா வருங்காலத்தில் பங்கேற்கும்.

பாரீஸ் பருவநிலை மாறுபாட்டு ஒப்பந்தத்தில் அமெரிக்கா ட்ரம்ப் நிர்வாகத்தில் வெளியேறியது. அந்த உத்தரவு மறு ஆய்வு செய்யப்படும். புதிய வேலைவாய்புகள், பருவநிலை மாற்றச் சிக்கல்களைத் தீர்க்கும் நடவடிக்கைகள் போன்றவை எடுக்கப்படும்.

கறுப்பினத்தவர்கள், லாட்னோ, பூர்வீக அமெரிக்கர்கள், ஆசிய அமெரிக்கர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள், எல்ஜிபிடி பிரிவினர், மதச்சிறுபான்மையினர் ஆகியோர் அனைவரையும் சமமாக நடத்தும் உத்தரவு பிறப்பிக்கப்படும்.

மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவில் அகதிகள் நுழையாத வகையில் ட்ரம்ப் ஆட்சியில் சுவர் எழுப்ப நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த நிதியுதவி உடனடியாக ரத்து செய்யப்படும்''.

இவ்வாறு ஜென் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x