Published : 20 Jan 2021 17:54 pm

Updated : 20 Jan 2021 17:54 pm

 

Published : 20 Jan 2021 05:54 PM
Last Updated : 20 Jan 2021 05:54 PM

நம்பிக்கையிழப்புதான் மிகப்பெரிய ஆபத்து; 10 ஆண்டுகளில் எந்தவிதமான போரும் புரியாத அதிபர் என்பதில் பெருமை: ட்ரம்ப் பிரியாவிடைப் பேச்சு

trump-offers-best-wishes-to-new-administration-in-farewell-video-address
ட்ரம்ப் : கோப்புப்படம்

வாஷிங்டன்

நம் மீதும், நம் தேசத்தின் மகத்துவத்துன் மீதும் நம்பிக்கை இழப்பதுதான் நாம் சந்திக்கும் மிகப்பெரிய ஆபத்து. கடந்த 10 ஆண்டுகளில் எந்தவிதமான புதிய போரையும் முன்னெடுக்காத அதிபர் என்ற பெருமையுடன் செல்கிறேன். புதிய அரசுக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன் என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது பிரியாவிடைப் பேச்சில் உருக்கமாகத் தெரிவி்த்தார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடனும், துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸும் வெற்றி பெற்றனர். அமெரிக்காவின்46-வது அதிபராக ஜோ பைடனும், துணை அதிபராக கமலா ஹாரிஸும் புதன்கிழமை நண்பகலில் பதவி ஏற்கின்றனர்.


இந்த அதிபர் தேர்தலில் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளது எனக் கடைசிவரை அதிபர் ட்ரம்ப் கூறி வந்தார். அதையே தனது கடைசிப் பேச்சிலும் கூற மறக்கவில்லை. அதிபர் ட்ரம்ப் பதவியிலிருந்து செல்லும் முன் நாட்டு மக்களுக்கு 20 நிமிடங்கள் உரையாற்றிய வீடியோவை வெள்ளை மாளிகை நேற்று வெளியிட்டது.

அந்த வீடியோவில் அதிபர் ட்ரம்ப் பேசியதாவது:

''அமெரிக்காவையே மீண்டும் உயர்ந்த நாடாக நான் என் பதவிக்காலத்தில் மாற்ற முயற்சி மேற்கொண்டேன். தேர்தலில் கடினமான போராட்டங்களையும், கடினமான போரையும் சந்தித்தேன். அதன்பின் என்னை நீங்கள் தேர்ந்தெடுத்தீர்கள்.

இன்று 45-வது அதிபராக இருந்து எனது கடமைகளை முடித்துள்ளேன. நாம் பல்வேறு விஷயங்களை ஒன்றாக இணைந்து சாதித்துவிட்டோம் என்ற உண்மையுடன் நான் உங்கள் முன் நிற்கிறேன் என்பதில் பெருமைப்படுகிறேன். நான் இந்த இடத்துக்கு வந்தபின் ஏராளமானவற்றைச் செய்திருக்கிறேன். அதிபர் என்ற வார்த்தையின் அர்த்தத்துக்கு அப்பாற்பட்டு நான் பணியாற்றி இருக்கிறேன்.

இந்த வாரம் நாம் புதிய நிர்வாகத்தை ஏற்கப் போகிறோம். அமெரிக்காவைப் பாதுகாப்பாகவும், மேன்மையடையச் செய்யவும் வெற்றிபெறவும் பிரார்த்திப்போம். புதிய அரசுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். அவர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கவும் வாழ்த்துகிறேன். அதிர்ஷ்டம் மிகவும் முக்கியமான வார்த்தை.

அமெரிக்க நாடாளுமன்றம் தாக்கப்பட்டபோது மக்கள் அனைவரும் அச்சமடைந்தனர். அரசியல் வன்முறை என்பது நாம் மதிக்கும் அனைத்துக்கும் எதிரான தாக்குதல். இதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது. நாம் எப்போதும் இல்லாதவகையில், ஒன்றாக இணைந்து மதிப்புமிக்க விஷயங்களைப் பகிர்ந்துகொண்டு, கோபத்தை மறந்து, ஒரு தளத்தில் இணைய வேண்டும்

ஏராளமான வரிச் சலுகைகள், சீனா மீது வரிவிதிப்பு, எரிசக்தியில் தன்னிறைவு, குறுகிய காலத்தில் கரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு எனப் பல்வேறு விஷயங்களைச் செய்திருக்கிறோம். அமெரிக்காவையும், வெளிநாடுகளில் அமெரிக்கத் தலைமையையும் வலிமைப்படுத்தி இருக்கிறோம். இந்த உலகத்தை நாம் மதிக்க வைத்திருக்கிறோம். இந்த மதிப்பை அடுத்துவருவோர் இழந்துவிடக் கூடாது.

மத்தியக் கிழக்கு நாடுகளில் பல்வேறு அமைதி ஒப்பந்தங்கள் என்னுடைய ஆட்சியில் கையொப்பம் ஆகின. இதுபோன்ற ஒப்பந்தங்கள் நடக்கும் என யாரும் நம்பவில்லை. மத்தியக் கிழக்கு நாடுகளில் வன்முறையின்றி, ரத்தமின்றி, போரை முடிவுக்குக் கொண்டுவந்து, நமது வீரர்களை நாடு திரும்பவைத்தோம்.

கடந்த 10 ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர்களில் எந்தவிதமான புதிய போரும் எந்த நாட்டின் மீதும் செய்யாத அதிபர் நான்தான் என்பதில் பெருமைப்படுகிறேன்.

உலகின் சக்தி மிக்க நாடான அமெரிக்கா வெளிநாடுகளில் இருந்து நிலையான அச்சுறுத்தல்கள், சவால்களை எதிர்கொண்டது. ஆனால், நம் மீது நம்பிக்கை இழப்பதும், நம்முடைய தேசத்தின் மகத்துவத்தின் மீது நம்பிக்கை இழப்பதும்தான் நாம் சந்திக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல். தேசம் என்பதில் நாம் உணர்வுபூர்வமாக இருக்க வேண்டும்.

சுதந்திரமான கருத்துரிமை, பேச்சுரிமை, வெளிப்படையான விவாதம்தான் இந்தச் செழுமையான பாரம்பரியத்தின் மையமாக நம்பப்படுகிறது. நாம் யார், எப்படி இங்கு வந்தோம் என்பதை மறந்தாலும், அமெரிக்காவில் அரசியல் தணிக்கை, தடுப்புப் பட்டியல் நடப்பதை அனுமதிக்கலாமா?

இதை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. வெளிப்படையான விவாதத்தை மறுப்பதும், கருத்துரிமையை மறுப்பதும் நம்முடைய பாரம்பரியத்தை மீறுவதாக அமையும்.
நான் அதிபர் பதவியை விட்டுச் சென்றாலும், தொடர்ந்து பொதுவாழ்க்கையில் இருப்பேன். புதன்கிழமை நண்பகலில் ஆட்சி மாற்றத்தை ஒப்படைக்கத் தயாராகிறேன்''.

இவ்வாறு ட்ரம்ப் தெரிவித்தார்.

தவறவிடாதீர்!


US President Donald TrumpFarewell addressNew administrationAmericans must unifyCommon destiny.அமெரிக்க அதிபர் ட்ரம்ப்அதிபர் ட்ரம்ப் பிரியாவிடைப் பேச்சுஅமெரிக்க அதிபர் தேர்தல்ஜோ பைடன் அதிபராக பொறுப்பேற்பு

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x