

அமெரிக்காவின் 46-வது அதிபராகப் பொறுப்பேற்க இருக்கும் ஜோ பைடன், அமெரிக்காவில் கரோனாவில் உயிரிழந்த 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்காக வாஷிங்டனில் நடந்த நினைவஞ்சலிக் கூட்டத்தில் பங்கேற்று அஞ்சலி செலுத்தினார்.
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 3-ம் தேதி நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடனும், துணை அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட இந்திய வம்சாவளியும், தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸும் வெற்றி பெற்றனர்.
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுவாழ்க்கையில் இருக்கும் ஜோ பைடன், கடந்த 1973-ம் ஆண்டு முதல் முறையாக செனட்டராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். டெலாவேர் மாநிலத்தில் மிக இளம் வயதில் செனட்டராக ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. செனட்டராகவும், எம்.பி.யாகவும் இருந்த ஜோ பைடன், ஒபாமா ஆட்சியில் துணை அதிபராக உயர்ந்தார்.
அதிபராக இருக்கும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் ட்ரம்ப் பதவிக்காலம் நேற்று (19-ம் தேதி) முடிந்தது. இதைத் தொடர்ந்து இன்று அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடனும், துணை அதிபராக கமலா ஹாரிஸும் பதவி ஏற்கின்றனர்.
இதற்காக தனது சொந்த நகரான டெலாவேரிலிருந்து ஜோ பைடன் தனி விமானத்தில் வாஷிங்டன் நகருக்குப் புறப்பட்டார். ஜோ பைடனுடன் அவரின் மனைவி ஜில் பைடன், மகன் ஹன்டர் பைடன், பேரக் குழந்தைகள், குடும்பத்தார் அனைவரும் புறப்பட்டனர்.
டெலாவேர் நகரிலிருந்து ஜோ பைடன் புறப்படும் முன் மக்களுக்கு உரையாற்றினார். அதில் அவர் பேசுகையில், “அமெரிக்காவின் அடுத்த அதிபராகப் பொறுப்பேற்பதில் பெருமைப்படுகிறேன். நான் எப்போதும் டெலாவேர் நகரின் மகனாக இருப்பதிலேயே பெருமைப்படுகிறேன்.
எனது குடும்பத்தினரும், நானும் மீண்டும் வாஷிங்டன் நகருக்குச் செல்கிறோம். தெற்காசியாவைச் சேர்ந்த கறுப்பினப் பெண் துணை அதிபராகப் பதவி ஏற்கப்போகிறார். அவரைச் சந்திக்கப் போகிறேன் (உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர்விட்டார்).
வாஷிங்டன் நகருக்கு என்னுடைய 2-வது பயணம் மிகவும் உணர்வுபூர்வமானது. டெலாவேர் மக்கள் அனைவருக்கும் பைடன் குடும்பத்தினர் சார்பில் நன்றி தெரிவிக்கிறேன். என்னால் நான் நினைப்பதை முழுமையாக உங்களிடம் பேச முடியவில்லை.
நம்முடைய குடும்பத்தில் மதிப்புமிக்க விஷயங்களைப் பகிர்ந்துள்ளோம். போராட்ட குணத்தை, நல்ல குணங்களை வெளிப்படுத்தினோம். அதன்படியே உலகைக் கண்டோம். அனைத்துமே டெலாவேரிலிருந்து கிடைத்தது.
இந்த மாநிலம்தான் எனக்கு தாய், தந்தையை வழங்கி, அவர்களுக்கும், எனக்கும் வாழ்வாதாரத்தை வழங்கியது. எனக்குச் சகோதரர்களையும், சகோதரிகளையும் மாநிலம் வழங்கியுள்ளது. சிறு வயதிலேயே என்னை செனட்டராகத் தேர்ந்தெடுத்து என் மீது இன்றுவரை நம்பிக்கை வைத்துள்ளது”.
இவ்வாறு ஜோ பைடன் தெரிவித்தார்.
வாஷிங்டன் நகரம் வந்தபின், லிங்கன் நினைவிடத்துக்குச் சென்ற ஜோ பைடன், அவரின் மனைவி ஜில் பைடன் ஆகியோர் கரோனாவில் உயிரிழந்த 4 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு நினைவஞ்சலி செலுத்தினர்.
இந்த நினைவஞ்சலிக் கூட்டத்தில் ஜோ பைடன் பேசியதாவது:
''கரோனாவில் இறந்தவர்கள் குறித்த ரணங்களை ஆற்ற நாம் அவர்களைக் கண்டிப்பாக நினைவில் கொள்ள வேண்டும். சில நேரங்களில் நினைவில் கொள்ளக் கடினமாக இருந்தாலும், அதுதான் ரணங்களை ஆற்றும். ஒரு தேசமாக நாம் அவர்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும். அதற்காகத்தான் நாம் இங்கே கூடியிருக்கிறோம். மாலை சூரியன் மறைவுக்கும், இருளுக்கும் இடைப்பட்ட நேரத்தில் நாம் இங்கே நின்று நாம் இழந்த அன்புக்குரியவர்களுக்காக அஞ்சலி செலுத்துவோம்.
கரோனாவில் உயிரிழ்தவர்களுக்காக நாம் இன்று இரவு கூடி அஞ்சலி செலுத்தப் போகிறோம். உடல்ரீதியாக நாம் பிரிந்திருக்கலாம். ஆனால், அமெரிக்க மக்கள் என்ற உணர்வில் நாம் ஒன்றாக இருந்து அஞ்சலி செலுத்திட வேண்டும்''.
இவ்வாறு ஜோ பைடன் தெரிவித்தார்.
கரோனாவில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் லிங்கன் நினைவரங்கில் 400 ஒளிவிளக்குகள் ஒளி வீச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் முறையாக 400 விளக்குகள் ஒளிரப்போகின்றன.
இது தவிர நியூயார்க் எம்பயர் ஸ்டேட் கட்டிடம், சீட்டலில் உள்ள ஸ்பேஸ் நீடில் போன்றவற்றிலும் ஒளி அலங்காரம் செய்யப்பட்டுள்ளன. வில்மிங்டன், ஒக்லாந்து, மியாமி, அட்லாண்டா, டியர்போர்ன், லாஸ் வேகாஸ், பிலடெல்பியா, ஸ்கான்டன், சார்லஸ்டன், ஹூஸ்டன் ஆகிய நகரங்களிலும் அஞ்சலி செலுத்த அரசுக் கட்டிடங்கள் ஒளி வீச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.