Published : 20 Jan 2021 07:00 AM
Last Updated : 20 Jan 2021 07:00 AM

கரோனா வைரஸுக்கு பயந்து அமெரிக்க விமான நிலையத்தில் 3 மாதங்கள் பதுங்கி வாழ்ந்த இந்தியர் கைது

சிகாகோ

கரோனா வைரஸுக்கு பயந்து அமெரிக்காவின் சிகாகோ விமான நிலையத்தில் 3 மாதங்கள் பதுங்கி வாழ்ந்த இந்திய வம்சாவளி இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸின் புறநகரான ஆரஞ்ச் பகுதியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஆதித்யா சிங் (வயது 36) என்பவர், நண்பர்களுடன் வசித்து வந்தார். லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து விமானம் மூலம் சிகோகாவின் ஓ'ஹேர் விமான நிலையத்துக்கு கடந்த அக்டோபர் 19-ம் தேதி அவர் சென்றார். விமான நிலையத்தின் உயர் பாதுகாப்பு பகுதியில் சுமார் 3 மாதங்கள் ஆதித்யா சிங் பதுங்கி வாழ்ந்துள்ளார். கடந்த 16-ம் தேதி மதியம், யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவன ஊழியர்கள் 2 பேர், அவரை பார்த்து சந்தேகம் அடைந்தனர். அடையாள அட்டையை கேட்டனர். அப்போது ஆதித்யா சிங் ஓர் அடையாள அட்டையை காண்பித்தார். அதில் இருந்த புகைப்படத்துக்கும் ஆதித்யா சிங்குக்கும் வேறுபாடு இருந்ததால் போலீஸில் புகார் அளித்தனர். இதையடுத்த ஆதித்யா சிங் கைது செய்யப்பட்டார்.

"கரோனா வைரஸுக்கு பயந்து வீட்டை விட்டு வெளியேறி சிகாகோ விமான நிலையத்துக்கு வந்தேன். மீண்டும் வீட்டுக்கு சென்றால் வைரஸ் தொற்றிவிடும் என்று அஞ்சினேன். அதனால் விமான நிலையத்திலேயே தங்கிவிட்டேன். பயணிகள், விமான நிலைய ஊழியர்களிடம் உணவு வகைகளை வாங்கி சாப்பிட்டேன். விமான நிலைய வளாகத்தில் ஓர் அடையாள அட்டை கிடைத்தது. யாராவது சந்தேகப்பட்டு கேட்டால் அந்த அடையாள அட்டையை காண்பிப்பேன்" என்று அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஆதித்யா சிங் காண்பித்த அடையாள அட்டை விமான நிலைய மூத்த அதிகாரிக்கு சொந்தமானது. இது தொடர்பான வழக்கைகுக்
கவுன்டி நீதிபதி சூசன்னா ஆர்டிஸ் விசாரித்தார். அவர் கூறும்போது, அக்டோபர் 19 முதல் ஜனவரி 16-ம் தேதி வரை விமான நிலையத்தில் ஒருவர் வாழ்ந்துள்ளார். அவரை யாருமே கண்டுபிடிக்கவில்லை என்று கூறுவது அதிர்ச்சி அளிக்கிறது. ஆதித்யா சிங் ரூ.73,200 செலுத்தி ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம்" என்று உத்தரவிட்டார்.

சினிமாவில் வந்தது போலவே..

ஆதித்யா சிங்கைப்போல, ஒருவர் 9 மாதம் விமான நிலையத்தில் தங்கியிருந்த கதையை சொல்லும் படம் தான் `தி டெர்மினல்'. டாம் ஹாங் நடித்து 2004-ல் வெளியான ஹாலிவுட் படம் இது. விக்டர் நவ்ஸ்ரோஸ்கி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் டாம். கற்பனை நாடான க்ரகோஷியா நாட்டைச் சேர்ந்த விக்டரின் தந்தை ஜாஸ் இசைக் குழுவின் ஆர்வலர். இந்தக் குழுவின் 57 இசைக் கலைஞர்களிடமும் ஆட்டோகிராப் வாங்க வேண்டும் என்பதில் ஆர்வமாக இருப்பவர். 56 பேரிடம் வாங்கி விடுகிறார். சாக்ஸபோன் கலைஞர் பென்னி கோல்சனிடம் வாங்குவதற்கு முன்பு விக்டரின் தந்தை இறந்து விடுகிறார். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற அமெரிக்கா வருகிறார் விக்டர்.

நியூயார்க்கின் ஜான் கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் இறங்குகிறார். அதே நேரத்தில் அவரது நாட்டில் உள்நாட்டுக் கலவரம் ஏற்பட, அதைக் காரணம் காட்டி அந்த நாட்டை ஒரு நாடாகவே அங்கீகரிக்க அமெரிக்கா மறுத்து விடுகிறது. பாஸ்போர்ட் செல்லாததாகி விடுகிறது. இதனால் விமான நிலையத்திலேயே தங்கி, படுத்து எப்படி பொழுதை கழிக்கிறார் என்பதுதான் கதை. பிறகு நண்பர்களின் உதவியோடு 57-வது ஜாஸ் கலைஞரிடம் ஆட்டோகிராப் வாங்கி விடுகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x