

கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்றார். துணை அதிபராக கமலா ஹாரிஸ் வெற்றி கண்டார். தேர்தலில் மீண்டும் போட்டியிட்ட அதிபர் ட்ரம்ப் (குடியரசு கட்சி) தோல்வியை ஏற்க மறுத்து பல வழக்குகள் தொடர்ந்தார். அவை தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்நிலையில், அமெரிக்க அதிபராக ஜோ பைடன் வரும் 20-ம் தேதி பதவியேற்க உள்ளார். இதற்கிடையில் கடந்த 6-ம் தேதி ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நுழைந்து வரலாறு காணாத வன்முறைகளில் ஈடுபட்டனர். இதில் 5 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் உலக நாடுகளை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்நிலையில் ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் மீண்டும் வன்முறையில் ஈடுபடக் கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் வாஷிங்டனில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. மேலும் நாடாளுமன்றத்தில் வன்முறையை தூண்டிவிட்ட ட்ரம்ப்பை பதவி நீக்கம் செய்வதற்கான முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன.
ஆனால் 25-வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தைப் பயன்படுத்தி, கண்டன தீர்மானம் அல்லது உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வந்து அதிபர் ட்ரம்ப்பை பதவி நீக்கம் செய்ய துணை அதிபர் மைக் பென்ஸ் மறுத்துவிட்டார். இதையடுத்து அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவையில் ஜனநாயக கட்சியினர் தீர்மானம் கொண்டு வந்தனர். இந்த தீர்மானத்தின் மீது நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.