

25 –வது அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தைப் பயன்படுத்தி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை பதவிநீக்கம் செய்ய முடியாது என்று துணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த 6-ம் தேதி அமெரி்க்க நாடாளுமன்றத்தை அதிபர் ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு நடத்திய போராட்டம், கலவரத்தில் 4 பேர் கொல்லப்பட்டனர்.இந்தச் சம்பவம் அமெரிக்காவையே உலுக்கியது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அதிபர் ட்ரம்பை 25-வது சட்டத்திருத்தத்தைப் பயன்படுத்தி பதவி நீக்கம் செய்ய வேண்டும் என பிரதிநிதிகள் சபையும், சபாநாயகருமான நான்ஸி பெலோசி ஆகியோர் துணை அதிபர் பென்ஸை வலியுறுத்தி இருந்தனர்.
இந்நிலையில், துணை அதிபர் மைக் பென்ஸ், பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்ஸி பெலோஸிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது. அதில் மைக் பென்ஸ் கூறியிருப்பதாவது:
நமது அரசியலமைப்பின்படி, 25-வது சட்டத்திருத்தம் என்பது தண்டனை அளிப்பதோ அல்லது கைப்பற்றுதலோ அல்ல. அதிபர் ட்ரம்புக்கு எதிராக 25-வது சட்டத்திருத்தத்தைப் பயன்படுத்தி அவரைப் பதவி நீக்கம் செய்வது கொடூரமான முன் உதாரணமாகிவிடும். அதுநாட்டின் சிறந்த நலனுக்கு உரியதாக இருக்கும் எனவும், நமது அரசியலமைப்புச் சட்டத்தின் நிலைத்தன்மைக்கும் சாதகமாக இருக்கும் என நான் நம்பவில்லை.
25 –வது சட்டத்திருத்தம் என்பது, அதிபர் செயல்முடியாமல் போகும்போதும், திறமையற்றவராக இருக்கும்போதுதான் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே உருவாக்கப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன், நீங்கள் 25-வது சட்டத்திருத்தத்தின்படி, ஓர் ஆணையத்தை உருவாக்கவேண்டும் என்று மசோதா தாக்கல் செய்தீர்கள்.
அதிபர் ட்ரம்ப் கரோனாவில் பாதிக்கப்பட்டபோது, அவரின் உடல்நிலை குறித்து அறிவியல்பூர்வமான உண்மைகள் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று கூறினீர்கள். கடந்த வாரம் நாடாளுமன்றத்தை நோக்கி நடந்த சம்பவங்களுக்குப்பின், அதிகாரமாற்றம் முறையாக நடக்க வேண்டும்.
கரோனா வைரஸ் பரவல், லட்சக்கணக்கான அமெரிக்க மக்களின் பொருளாதார பாதிப்பு, ஜனவரி 6-ம் தேதி நடந்த கலவரம் ஆகியவற்றுக்கு மத்தியில் அமெரிக்க மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டிய நேரம், அந்த ரணங்களை நாம் ஆற்ற வேண்டும்.
ஆதலால், மேலும், நாம் நமக்குள் பிளவுபடுத்திக் கொள்ளாமல், சூழலைக் கொதிப்படையச் செய்யாமல் நகர்த்த வேண்டும். பதற்றமில்லாமல் எங்களுடன் பணியாற்றி, நாட்டை ஒற்றுமையாக வைத்திருத்திருந்து, அமெரி்க்காவின் அடுத்த அதிபராக வர இருக்கும் ஜோ பைடனை வரவேற்போம்.
நான் தொடர்ந்து என்னுடைய பங்களிப்பை உங்களுக்க நல்ல முறையில் வழங்குவேன். அதிகாரமாற்றம் முறைப்படி இருக்கும் என்பதை உறுதியளிக்கிறேன்.
நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் நடந்த சம்பவம் அமெரிக்க மக்களுக்கு அதிர்ச்சியையும், வேதனையையும் அளித்துள்ளது. அதிபர் ட்ரம்ப் பதவிக்காலம் முடிய இன்னும் 8 நாட்கள் இருக்கும் நிலையில் அவருக்கு எதிராக 25-வது சட்டத்திருத்தத்தை பயன்படுத்தக் கூறுகிறீர்கள். இது தேசத்துக்கும், நமது அரசியலமைப்புச் சட்டத்துக்கும் உகந்ததாக இருக்காது.
இவ்வாறு மைக் பென்ஸ் தெரிவித்தார்.
கடந்த 6-ம் தேதி நாடாளுமன்றத்தின் அதிபர் ட்ரம்ப் ஆதரவாளர்கள் செய்த கலவரத்துக்குப்பின் அதிபர் ட்ரம்ப்பும், துணை அதிபர் மைக் பென்ஸும் பேசிக்கொள்ளவில்லை. கடந்த 5 நாட்களுக்குப்பின் நேற்று இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துப் பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது.