உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானிகள் குழு: நாளை மறுநாள் வூஹான் வருகை

உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானிகள் குழு: நாளை மறுநாள் வூஹான் வருகை

Published on

உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானிகள் குழு வரும் வியாழக்கிழமை வூஹான் நகருக்கு வருகை தர இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் சீனாவின் ஆய்வகத்திலிருந்துதான் பரவியுள்ளது என்று அமெரிக்கா தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால், சீனா இதனை மறுத்து வந்தது. இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பின் 10 பேர் அடங்கிய விஞ்ஞானிகள் குழு இம்மாதம் சீனாவுக்குச் செல்ல இருப்பதாக கடந்த மாதம் கூறப்பட்டது.

ஆனால், விஞ்ஞானிகள் குழு செல்வதற்கு சீனா அனுமதிக்கவில்லை என்றும், சீனாவின் முடிவு ஏமாற்றம் அளிப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது.

விஞ்ஞானிகள் குழுவை சீனா அனுமதிக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தின. வூஹானின் ஆய்வகத்திலிருந்து கரோனா பரவவில்லை. உலகின் பல இடங்களில் கரோனா பரவல் நிகழ்ந்துள்ளது என்று சீனா விளக்கம் அளித்தது.

இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு வூஹான் நகருக்கு வியாழக்கிழமை வர இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில், “உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானிகள் குழு வியாழக்கிழமை வூஹான் நகருக்கு வர இருக்கிறது. 10 பேர் கொண்ட குழுவினர் வருகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 9 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கையை அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர். இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளில் கரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in