

அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கு எதிராக 'ஜிகாத்' (புனிதப்போர்) நடத்த ஒன்றிணையுமாறு முஸ்லிம் இளைஞர்களுக்கு ஐ.எஸ். அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
ஐ.எஸ். செய்தித் தொடர்பாளர் அபு முகமது அல் அதானி வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில், "முஸ்லிம் இளைஞர்களே! நீங்கள் உலகின் எப்பகுதியில் இருந்தாலும் இணைந்து வாருங்கள்.
அமெரிக்கா, ரஷ்யாவுக்கு எதிராக நாம் 'ஜிகாத்' நடத்த வேண்டும். ஏனெனில் இது இறைநம்பிக்கை உடையவர்களுக்கும் நாத்திகர்களுக்கும் இடையேயான போர். முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்க்கப்படும் வன்முறைக்கு எதிரான போர்" எனப் பேசியுள்ளார்.
இத்தகவலை சீன செய்தி நிறுவனமான சினுவா உறுதி செய்துள்ளது.
அல்காய்தா ஆதரவு இயக்கமான நுர்சா முன்னணி அமைப்பானது ரஷ்யாவுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்படும் என அறிவித்த மறு நாளிலேயே ஐ.எஸ். அமைப்பின் இந்த மிரட்டல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி முதல் சிரியாவில் நுர்சா முன்னணி அமைப்பு, ஐ.எஸ். அமைப்பு படைகளை எதிர்த்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவது கவனிக்கத்தக்கது.
அல்காய்தா, ஐ.எஸ். தவிர சிரியாவில் காலூன்றியுள்ள மற்ற கிளர்ச்சிப் படைகளும் ரஷ்யாவுக்கு எதிராக தாக்குதல்களை தொடங்குமாறு வலியுறுத்தி வருகின்றன.