

இந்தோனேசிய கடற்பகுதியில் 62 பேருடன் மாயமான ஸ்ரீவிஜயா பயணிகள் விமானத்தின் பாகங்கள், பயணிகள் உடல்கள் கடற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், கடலில் விழுந்து விமானம் விபத்துக்குள்ளதாக இந்தோனேசிய அரசு சார்பில் எந்த அதிகாரபூர்வமானத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரிலிருந்து போன்டியானக் எனும் நகருக்கு நேற்று நண்பகல்(உள்ளூர்நேரப்படி) 2.36 மணிக்கு ஸ்ரீவிஜயா விமானநிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 737-500 விமானம் புறப்பட்டது. விமானத்தில் 50 பயணிகள், 12 ஊழியர்கள் இருந்தனர்.
விமானம் புறப்பட்டவுடன் விமானி, கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு விமானத்தை 29 ஆயிரம் அடி உயரத்தில் பறக்க அனுமதி கேட்டுள்ளார். ஆனால், அடுத்த4 நிமிடங்களில் விமானம் கட்டுப்பாட்டு அறையின் தொடர்பிலிருந்து துண்டிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்தோனேசிய அரசின் 4 போர் கப்பல்கள், 12-க்கும் மேற்பட்ட படகுகள் இணைந்து லான்சங் தீவுக்கும், லாக்கி தீவுக்கும் இடையே தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன. வடக்கு ஜகார்த்தாபகுதி என்பது ஆயிரக்கணக்கான தீவுகளைக் கொண்டதாகும்.
இந்தத் தீவுகளில் தேடுதல் வேட்டை தீவிரமாக நடந்தது.இந்த தேடுதலின்போது, விமானத்தின் உடைந்த பாகங்கள், உடைகளை மீனவர்கள் கண்டுபிடித்ததாக தேசிய மீட்புப்பபடையின் துணைத் தலைவர் பாம்பாங் சூர்யோ அஜி தெரிவித்தார். கடலில் இருந்து மீட்கப்பட்ட பொருட்களையும் தேசிய மீட்புப்படையினரிடம் மீனவர்கள் ஒப்படைத்தனர்.
மீனவர்களில் ஒருவரான சோலிஹின்(வயது22) உள்ளூர் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், “ நாங்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்த இடத்திலிருந்து 30 மீட்டர் தொலைவில் மிகப்பெரிய சத்தம் கேட்டு கடல்நீர் பீறிட்டு மேலே எழும்பியது.
வெடிகுண்டு வெடித்துவிட்டதோ அல்லது சுனாமி ஏதும் ஏற்பட்டதோ என அச்சமடைந்தோம். மழை பெய்து காலநிலையும் மோசாக இருந்தது. இதனால் எங்களால் கடலுக்குள் என்ன விழுந்தது என அறியமுடியவில்லை.ஆனால், கடல்நீர் பீறிட்டு மேலே எழுந்ததைபார்த்தோம், பெரிய சத்தத்தையும் கேட்டோம். இந்த சத்தத்துக்குபின் மிகப்பெரிய அலை எங்கள் படகை நோக்கி வந்தது. அதன்பின்புதான் கடலுக்குள் விமானம் விழுந்திருப்பதை உணர்ந்தோம்” எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே இந்தோனேசியா தேசிய தேடுதல் மீட்புப்படையினர், கடல் பகுதியிலிருந்து விமானத்தின் பாகங்களையும், கடலில் மிதந்த பயணிகளின்உடலையும் இன்று காலை மீட்டதாகத் தவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனாலும், விமானத்திலிருந்து ரேடார் சிக்னல் வருவதால் இந்தோனேசியஅரசு நம்பிக்கையாக இருக்கிறது. இதன் காரணமாக கடலில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது என்பதை அதிகாரபூர்வாக அறிவிக்கத் தயங்கி வருகிறது.
இந்தோனேசியா கடற்பகுதியில் விமானங்கள் விழுவது தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கு முன் கடந்த 2018-ல் விமானம் லயன் ஏர்வேஸுக்கு சொந்தமான போயிங்737 மேக்ஸ்8 189 பயணிகளுடன் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில் அனைவரும் உயிரிழந்தனர். 1997-ம் ஆண்டு சுமத்ரா தீவு அருகே கருடா விமானம் விபத்துக்குள்ளானதில் 234 பயணிகள் உயிரிழந்தனர். 2014-ம் ஆண்டில் ஏர் ஏசியா விமானம் இந்தோனேசியாவின் சுரபயா நகரிலிருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்டபோது கடலில் விழுந்தது இதில் 162 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.