Last Updated : 10 Jan, 2021 07:48 AM

 

Published : 10 Jan 2021 07:48 AM
Last Updated : 10 Jan 2021 07:48 AM

பாகிஸ்தானில் பல நகரங்கள் இருளில் மூழ்கின: மக்கள் அவதி

இருளில் மூழ்கிய இருந்த இஸ்லாமாபாத் நகரம்: படம் உதவி ட்விட்டர்

இஸ்லாமாபாத்


பாகிஸ்தானின் மின்பகிர்மான முறையில் மிகப்பெரிய கோளாறு ஏற்பட்டதையடுத்து, அந்நாட்டின் பல நகரங்கள் நேற்று இரவு இருளில் மூழ்கின.

இதனால், மக்கள் அத்தியாவசியப் பணிகளைக் கவனிக்க முடியாமல் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.குறிப்பாக, கராச்சி, ராவல்பிண்டி, லாகூர், இஸ்லாமாபாத், முல்தான் உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் நேற்று இரவு பல மணிநேரங்கள் இருளில் மூழ்கின.

இதுகுறித்து இஸ்லாமாபாத் மின்வாரிய துணை ஆணையர் ஹம்ஸா சப்காத் ட்விட்டரில் பதிவிட்ட செய்தியில் “ தேசிய அளவில் மின்பகிர்மான இணைப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளது, அதனால் பல நகரங்களுக்கும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இந்தப்பிரச்சினை சரியாக சில மணிநேரம் ஆகலாம்” எனத் தெரிவித்திருந்தார்.

மின்துறை அமைச்சர் உமர் அயுப் கான் கூறுகையில் “ தேசிய மின்பகிர்மான முறை திடீரென 50 அலைவரிசையிலிருந்து பூஜ்ஜியமாகக் குறைந்துவிட்டது. இதைச் சரி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

சிந்து மாகாணத்தில் உள்ள குட்டு மின்சார நிலையத்தில்தான் இரவு 11.41 மணிக்கு பழுது ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதனால்தான், மின் அலைவரிசைய திடீரென 50லிருந்து பூஜ்ஜியமாகக் குறைந்துள்ளது. மின்நிலையங்களுக்கு வரும் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதைச் சீரமைப்பும் பணிகளை கண்காணித்து வருகிறேன். மக்கள் அனைவரும் மின்சாரம் வரும் வரை அமைதி காக்க வேண்டும். மின்சார பகிர்மானத்தில் பழுதை சீரமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது” எனத் தெரிவித்தார்.

பல மணிநேரத்துக்குப்பின் இன்று அதிகாலை முதல் பல்வேறு நகரங்களில் மின்சாரம்படிப்படியாக வழங்கப்பட்டது. இதுதொடர்பாகவும் மின்துறை அமைச்சர் கான் ட்விட்டரில் மின்சாரம் படிப்படியாக வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x