மும்பை தாக்குதலில் மூளையாகச் செயல்பட்ட லக்விக்கு 15 ஆண்டுகள் சிறை: பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

லஷ்கர் இ தொய்பா தீவிரவாதத் தலைவர் ஜாகிர் உர் ரஹ்மான் லக்வி: கோப்புப் படம்.
லஷ்கர் இ தொய்பா தீவிரவாதத் தலைவர் ஜாகிர் உர் ரஹ்மான் லக்வி: கோப்புப் படம்.
Updated on
1 min read

மும்பை தீவிரவாதத் தாக்குதலில் மூளையாகச் செயல்பட்டவரும், முக்கியக் குற்றவாளியுமான லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஜாகிர் உர் ரஹ்மான் லக்விக்கு, பயங்கரவாதச் செயல்களுக்கு நிதியுதவி வழங்கிய வழக்கில் 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து லாகூர் தீவிரவாதத் தடுப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

மும்பை தீவிரவாதத் தாக்குதல் வழக்கில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஜாமீனில் இருந்துவரும் லக்வி, தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த புகாரில் பஞ்சாப் மாகாண தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸாரால் கடந்த 2-ம் தேதி கைது செய்யப்பட்டார்.

சிறிய மருத்துவமனை நடத்தி, அதன் மூலம் தீவிரவாதத்துக்கு நிதி அனுப்பி வரும் பணியை லக்வி செய்து வந்துள்ளார். இந்த மருத்துவமனை மூலம் கிடைக்கும் பணத்தையும் தீவிரவாதச் செயல்களுக்குப் பயன்படுத்தியுள்ளார் எனத் தீவிரவாதத் தடுப்பு போலீஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் தீவிரவாதத் தடுப்பு நீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பு குறித்து நீதிமன்ற அதிகாரி கூறுகையில், “தீவிரவாதிகளுக்கும், தீவிரவாதச் செயல்களுக்கும் லக்வி நிதியுதவி செய்தது தீவிரவாதத் தடுப்பு நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, 1977-ம் ஆண்டு தீவிரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பல்வேறு பிரிவுகளில் அவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி இஜாத் அகமது தீர்ப்பளித்தார்.

3 பிரிவுகளில் ஒவ்வொரு பிரிவுக்கும் தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை என 3 தண்டனைகளையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும். மேலும், பாகிஸ்தான் பண மதிப்பில் ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராதத் தொகையைச் செலுத்தாவிட்டால், கூடுதலாக 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டியது இருக்கும். இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்ட பின் லக்கி சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்” எனத் தெரிவித்தார்.

லஷ்கர் இ தொய்பா அமைப்பு, ஐ.நா.வால் தடை செய்யப்பட்ட அமைப்பாகவும், அதன் தலைவர் லக்வி தேடப்படும் தீவிரவாதியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in