Published : 08 Jan 2021 01:54 PM
Last Updated : 08 Jan 2021 01:54 PM

உருமாறிய கரோனாவுக்கு எதிராக எங்கள் தடுப்பு மருந்து சிறப்பாகச் செயல்படுகிறது: பைசர் நிறுவனம்

உருமாறிய கரோனா வைரஸுக்கு எதிராக பைசர் கரோனா தடுப்பு மருந்து சிறப்பாகச் செயல்படுகிறது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பைசர் நிறுவனம் தரப்பில், “தென் ஆப்பிரிக்கா மற்றும் பிரிட்டனில் கண்டறியப்பட்ட புதியவகை கரோனா வைரஸ்கள் N501Y என்கிற மரபணு மாற்றத்தைக் கொண்டுள்ளன. இதன் காரணமாக இவை மிக விரைவாகப் பரவுகின்றன.

இந்த நிலையில் பைசர் கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட 20 பேரின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டுப் பரிசோதிக்கப்பட்டன. இதன் முடிவில் புதியவகை கரோனா வைரஸுக்கு எதிராக பைசர் கரோனா தடுப்பு மருந்துகள் சிறப்பாகச் செயல்படுகின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில் பரவி வரும் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் அச்சத்தால் பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் பிரிட்டனுக்கு விமானப் போக்குவரத்தை நிறுத்திவிட்டன. புதிய வகை கரோனா வைரஸ், கட்டுப்பாட்டை மீறி இருப்பதால், மக்கள் வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என பிரிட்டன் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

சவுதி அரேபியா, துருக்கி, ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா, ஹாங்காங் உட்பட 40க்கும் மேற்பட்ட நாடுகள் பிரிட்டன் உடனான சர்வதேச விமானப் போக்குவரத்துக்குத் தடை விதித்துள்ளன. இந்த நிலையில் உலக நாடுகள் கரோனா மருத்துவப் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. சமூக இடைவெளியை மக்கள் கவனமாகப் பின்பற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ஸ்புட்னிக், மாடர்னா, பைசர் ஆகிய கரோனா தடுப்பு மருந்துகள் புதிய வகை வைரஸுக்கு எதிராகப் பயன் அளிப்பதாக மருந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x