

டொனால்ட் ட்ரம்ப் உடனடியாக பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி கடுமையாக விமர்சித்தார்.
ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் சான்றிதழ் அளிக்கும் நிகழ்ச்சி நாடாளுமன்றத்தில் புதன்கிழமை நடந்தது. இதனால் நாடாளுமன்றத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
அப்போது அமெரிக்க நாடாளுமன்றம் நோக்கி அதிபர் ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்தனர். அவர்களை நாடாளுமன்றத்துக்குள் நுழைய விடாமல் போலீஸார் தடுத்தபோது, போலீஸாருக்கும், ட்ரம்ப்பின் ஆதரவாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனால் கூட்டத்தைக் கலைக்கும் வகையில் போலீஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கூட்டத்தினரைக் கலைத்தனர். இந்த வன்முறையில் 4 பேர் பலியாகினர்.
நாடாளுமன்றத்தில் நடந்த வன்முறையை தொடர்ந்து வெள்ளை மாளிகையை சேர்ந்த அதிகாரிகள் பலர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். மேலும் ட்ரம்ப் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து பிரதிநிதிகள் சபை தலைவர் நான்சி பெலோசி பேசும்போது, “அமெரிக்க ஜனநாயகம் நேற்று தாக்குதலுக்கு உள்ளானது. அதிபர் ட்ரம்பின் செயலுக்கு அவர் உடனடியாக நீக்கம் செய்யப்பட வேண்டும். இது தொடர்பான சாதகமான பதிலை நாங்கள் துணை அதிபரிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.” என்று வலியுறுத்தியுள்ளார்.