அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி அதிகாரபூர்வமாக அறிவிப்பு: 20-ம் தேதி பதவியேற்பு

அமெரிக்க அதிபராகப் பதவியேற்க இருக்கும் ஜோ பைடன்: படம் உதவி | ட்விட்டர்
அமெரிக்க அதிபராகப் பதவியேற்க இருக்கும் ஜோ பைடன்: படம் உதவி | ட்விட்டர்
Updated on
2 min read

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராகப் போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றி பெற்றார் என அதிகாரபூர்வமாக நாடாளுமன்றக் கூட்டுக்குழுக் கூட்டத்தில் இன்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, வரும் 20-ம் தேதி அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்கிறார். துணை அதிபராத கமலா ஹாரிஸ் பதவியேற்க உள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த ஆண்டு நவம்பர் 3-ம் தேதி நடந்தது. இதில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். ஆனால், இந்த தேர்தல் வெற்றியை ஏற்காத அதிபர் ட்ரம்ப் பல்வேறு மாகாண நீதிமன்றங்களில் குடியரசுக் கட்சி சார்பில் முறையீடு செய்தார். ஆனால், பெரும்பலாானவை தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்நிலையில் ஜார்ஜியா மாகாணத்தில் நடந்த தேர்தலில் குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் இருவருக்கும் பெரும்பான்மை கிடைக்காததையடுத்து, மறுதேர்தல் நடந்தது. இதில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்கள் இருவர் வெற்றி பெற்றனர். இதன் மூலம் பிரதிநிதிகள் சபை, செனட் சபையில் ஜனநாயகக் கட்சியின் ஆதிக்கம் 2009-ம் ஆண்டுக்குப் பின் வந்துள்ளது.

ஜோ பைடன் வெற்றி குறித்து அதிகாரபூர்வ ஒப்புதல் அளிக்க நேற்று நாடாளுமன்றக் கூட்டுக்குழுக் கூட்டம் கூட்டப்பட்டது. ஆனால், நாடாளுமன்றக் கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது, அதிபர் ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திக் கலவரம் செய்தனர்.

இந்தப் போராட்டத்தில் போலீஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் பலர் காயமடைந்தனர். போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். இந்தக் கலவரத்தைத் தொடர்ந்து கூட்டுக்குழுக் கூட்டம் பாதியிலேயே முடிக்கப்பட்டு எம்.பி.க்கள் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் பின்னிரவில் மீண்டும் நாடாளுமன்றக் கூட்டுக்குழுக் கூட்டம் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் ஜோ பைடன், கமலா ஹாரிஸ் வெற்றி அதிகாரபூர்வமாக ஏற்கப்பட்டு சான்றளிக்கப்பட்டது.

வரும் 20-ம் தேதி அமெரிக்க அதிபராக ஜோ பைடனும், துணை அதிபராக கமலா ஹாரிஸும் பதவி ஏற்க உள்ளனர். கரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த நிகழ்ச்சியில் முக்கியமானவர்கள் மட்டுமே பங்கேற்க உள்ளனர்.

நவம்பர் 3-ம் தேதி நடந்த அதிபர் தேர்தலில் ஜோ பைடன், கமலா ஹாரிஸ் இருவரும் 8 கோடிக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று, 306 தேர்வாளர்கள் வாக்குகளைப் பெற்றனர். ஆனால், இந்தத் தேர்தல் முடிவுகளை அதிபர் ட்ரம்ப் ஏற்கவில்லை, பல்வேறு நீதிமன்றங்களில் முறையீடு செய்தார்.

அதுமட்டுமல்லாமல் நேற்று நடந்த நாடாளுமன்றக் கூட்டுக்குழுக் கூட்டத்திலும் ஜோ பைடன், கமலா ஹாரிஸ் வெற்றி செல்லாது என்று அறிவிக்கத் துணை அதிபர் மைக் பென்ஸை அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தினார். ஆனால், அதற்கு மைக் பென்ஸ் மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in