அமெரிக்க நாடாளுமன்ற வன்முறை: வெள்ளை மாளிகை பத்திரிகைத் துறை துணைச் செயலாளர் ராஜினாமா

அமெரிக்க நாடாளுமன்ற வன்முறை: வெள்ளை மாளிகை பத்திரிகைத் துறை துணைச் செயலாளர் ராஜினாமா
Updated on
1 min read

அமெரிக்க நாடாளுமன்றத் தாக்குதலைத் தொடர்ந்து வெள்ளை மாளிகை அதிகாரிகள் பலர் ராஜினாமா செய்து வருகின்றனர். பத்திரிகைத் துறை துணைச் செயலாளர் சாரா மேத்யூஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

கடந்த நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். வரும் 20-ம் தேதி முறைப்படி அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்க உள்ளார்.

இந்த நிலையில் தேர்தலில் மோசடி நடந்திருப்பதாகவும், இதனைச் சட்ட ரீதியாக எதிர்கொள்வேன் என்றும் ட்ரம்ப் தொடர்ந்து கூறி வந்தார்.

ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் சான்றிதழ் அளிக்கும் நிகழ்ச்சி நாடாளுமன்றத்தில் புதன்கிழமை நடந்தது. இதனால் நாடாளுமன்றத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அப்போது அமெரிக்க நாடாளுமன்றம் நோக்கி அதிபர் ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்தனர். அவர்களை நாடாளுமன்றத்துக்குள் நுழைய விடாமல் போலீஸார் தடுத்தபோது, போலீஸாருக்கும், ட்ரம்ப்பின் ஆதரவாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனால் கூட்டத்தைக் கலைக்கும் வகையில் போலீஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கூட்டத்தினரைக் கலைத்தனர். இந்த வன்முறையில் 4 பேர் பலியாகினர்.

வன்முறைச் சம்பவத்திற்கு முன்னாள் அதிபர் ஒபாமா, துணை அதிபர் மைக் பென்ஸ் ஆகியோர் வருத்தம் தெரிவித்தனர். வன்முறையைத் தொடர்ந்து வெள்ளை மாளிகையைச் சேர்ந்த பல்வேறு அதிகாரிகள் ராஜினாமா செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் வெள்ளை மாளிகை பத்திரிகைத் துறையின் துணைச் செயலாளர் சாரா மேத்யூஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதுகுறித்து சாரா மேத்யூஸ் கூறும்போது, “இந்த நாடாளுமன்றத்தில் பணியில் இருக்கும் ஒருவராக எனக்கு இன்று (புதன்கிழமை) நடந்த காட்சிகள் என்னை மிகவும் காயப்படுத்தின. நான் எனது பணியிலிருந்து விலகுகிறேன். நமது தேசத்திற்கு அமைதியான அதிகாரப் பரிமாற்றம் தேவை” என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in