

சட்டவிரோதப் போராட்டங்கள், எதிர்ப்புகள் மூலம் ஜனநாயக செயல்முறையை தகர்க்கப்பதை அனுமதிக்க முடியாது என்று அமெரிக்க நாடாளுமன்ற முற்றுகை குறித்து பிரதமர் மோடி கருத்துத் தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். வரும் 20-ம் தேதி முறைப்படி அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்க உள்ளார்.
இந்நிலையில், ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் சான்றிதழ் அளிக்கும் நிகழ்ச்சி நடாளுமன்றத்தில் நேற்று நடந்தது. இதனால் நாடாளுமன்றத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
அப்போது அமெரிக்க நாடாளுமன்றம் நோக்கி அதிபர் ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்தனர். அவர்களை நாடாளுமன்றத்துக்குள் நுழைய விடாமல் போலீஸார் தடுத்தபோது, போலீஸாருக்கும், ட்ரம்பின் ஆதரவாளர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து, கூட்டத்தைக் கலைக்க போலீஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி, தடியடியும் நடத்தினர். ஆனால் போராட்டக்கார்ரகள் ஆயுதங்கள் மூலம் தாக்கியதையடுத்து, போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் 200 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் இதுபோன்ற வன்முறையை யாரும் பார்த்தத்தில்லை எனும் அளவில் உலகத் தலைவர்கள் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளனர். அமைதியான, ஜனநாயக முறையில் அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் நடக்க வேண்டும் என்று உலகத் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ வாஷிங்டன் டிசியில் நடக்கும் வன்முறையையும், கலவரத்தையும் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. அமெரிக்கத் தேர்தலுக்குப்பின் அதிகாரம் அமைதியான முறையில் மாற்றம் செய்யப்பட்டு தொடர வேண்டும். சட்டவிரோதப் போராட்டங்கள், எதிர்ப்புகள் மூலம் ஜனநாயக செயல்முறையை தகர்ப்பதை அனுமதிக்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ அமெரிக்க நாடாளுமன்றத்தை நோக்கி நடக்கும் போராட்டம் அவமானமாக இருக்கிறது. உலகில் ஜனநாயகம் நிலைபெற்று இருக்க அமெரிக்கா குரல் கொடுக்கிறது. அதுபோல் அமெரிக்காவிலும் ஆட்சிமாற்றம், அதிகார மாற்றம் அமைதியாக முறையாக நடக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.