

அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வன்முறை நாட்டிற்கு பெரும் அவமானம். இதனை ட்ரம்ப்பே தூண்டினார் என்று முன்னாள் அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். வரும் 20-ம் தேதி முறைப்படி அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்க உள்ளார்.
இந்த நிலையில் தேர்தலில் மோசடி நடந்திருப்பதாகவும், இதனைத் தான் சட்ட ரீதியாக எதிர் கொள்வேன் என்றும் ட்ரம்ப் தொடர்ந்து கூறி வந்தார்.
ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் சான்றிதழ் அளிக்கும் நிகழ்ச்சி நாடாளுமன்றத்தில் புதன்கிழமை நடந்தது. இதனால் நாடாளுமன்றத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
அப்போது அமெரிக்க நாடாளுமன்றம் நோக்கி அதிபர் ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்தனர். அவர்களை நாடாளுமன்றத்துக்குள் நுழைய விடாமல் போலீஸார் தடுத்தபோது, போலீஸாருக்கும், ட்ரம்ப்பின் ஆதரவாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனால் கூட்டத்தைக் கலைக்கும் வகையில் போலீஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கூட்டத்தினரைக் கலைத்தனர். இந்த வன்முறையில் 4 பேர் பலியாகினர்.
இந்த வன்முறைக்கு அமெரிக்கத் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர், அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா ட்ரம்ப்பைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து பாரக் ஒபாமா கூறும்போது, ''இது எதேச்சையாக நிகழ்ந்தது என்று நினைத்தால் நம்மையே கேலிக்குள்ளாக்குவதற்குச் சமம். இந்த வன்முறை சட்டரீதியாக நடத்தப்பட்ட தேர்தல் குறித்து தொடர்ந்து பொய் கூறும் ட்ரம்ப்பால் தூண்டப்பட்டது. இந்த உண்மையை குடியரசுக் கட்சியினரும், அவர்கள் ஆதரவு ஊடகங்களும் சொல்ல விரும்பவில்லை” என்றார்.