Last Updated : 06 Jan, 2021 03:21 PM

 

Published : 06 Jan 2021 03:21 PM
Last Updated : 06 Jan 2021 03:21 PM

தனிப்பட்ட தகவல்களைத் திருடுவதாக சீனா மீது குற்றச்சாட்டு; மேலும் 8 செயலிகளுக்குத் தடை விதித்து ட்ரம்ப் உத்தரவு

டொனால்டு ட்ரம்ப் | கோப்புப் படம்.

வாஷிங்டன்

அமெரிக்காவின் பாதுகாப்பை வலுப்படுத்த சீனாவின் 8 செயலிகளுக்குத் தடை விதித்து அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்க மக்களின் தனிப்பட்ட தகவல்களை சீனா திருடுவதாக குற்றம் சாட்டியுள்ள இத்தடை உத்தரவு செவ்வாய்க்கிழமை முதல் 45 நாட்களில் நடைமுறைக்கு வருகிறது.

இவ்வுத்தரவில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்த அலிபே மற்றும் வீ சாட் பே உள்ளிட்ட எட்டு சீனச் செயலிகள் அமெரிக்காவில் பரிவர்த்தனை செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ள அமெரிக்க நிர்வாக உத்தரவில், இந்தியா ஏற்கெனவே 200க்கும் மேற்பட்ட சீன மென்பொருள் செயலிகளுக்குத் தடை நடவடிக்கைகள் மேற்கொண்டதை சுட்டிக்காட்டியுள்ளது.

அமெரிக்காவில் தேசிய அவசர நிலையைச் சமாளிக்க வேண்டுமெனில் சீனா தொடர்புடைய செயலிகளின் பரவலைத் தடுக்கும் நடவடிக்கை தேவையான ஒன்று என்று ட்ரம்ப்பின் உத்தரவு கூறியுள்ளது.

சீனாவின் செயலிகளான, அலிபே, கேம்ஸ்கேனர், க்யூ கியூ வாலட், ஷேர் இட், டென்சென்ட் க்யூ கியூ, விமேட், வீ சாட் பே மற்றும் டபிள்யூபிஎஸ் அலுவலகம் ஆகிய எட்டு சீனச் செயலிகளுக்குத் தடை விதிக்கபபட்டுள்ளது.

இதுகுறித்து ட்ரம்ப் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

"ஹாங்காங் மற்றும் மக்காவ் (சீனா) ஆகியவற்றை உள்ளடக்கிய, சீனத் தொடர்புடைய மொபைல் மற்றும் டெஸ்க்டாப் செயலிகள் மற்றும் பிற மென்பொருட்கள் பரவலின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது தொடர்ந்து அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கை மற்றும் அமெரிக்காவின் பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது.

இந்த நேரத்தில், சீனத் தொடர்புடைய மென்பொருள் செயலிகளால் ஏற்படும் அச்சுறுத்தலுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமாகும். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பிரபல டிக் டாக் வீடியோ செயலி மற்றும் பிரதான வீ சாட் செயலியைக் கையாள்வதற்கும் விதிக்கப்பட்ட இரு தடை ஆணைகளையும் இந்த உத்தரவு பின்பற்றுகிறது.

நாடு முழுவதும் 200க்கும் மேற்பட்ட சீனத் தொடர்புடைய மென்பொருள் செயலிகளைப் பயன்படுத்த இந்தியா தடை விதித்துள்ளது. இந்தியாவின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்ட ஓர் அறிக்கையில், இந்தச் செயலிகள் பயனர்கள் பற்றிய தரவுகளை அங்கீகரிக்கப்படாத முறையில் இந்தியாவிற்கு வெளியே உள்ள இடங்களைக் கொண்ட சேவையகங்களுக்காகத் திருடி மறைமுகமாக அனுப்புகின்றன என்று தெரிவித்துள்ளது.

சீனத் தொடர்புடைய பல மென்பொருள் செயலிகள், அமெரிக்காவில் உள்ள மில்லியன் கணக்கான பயனர்களிடமிருந்து ஏராளமான தகவல்களைக் கைப்பற்றுகின்றன. இது சீன ராணுவம் மற்றும் சீன அரசியல் கட்சி ஆகியவை அமெரிக்கர்களின் தனிநபர்களின் தனிப்பட்ட மற்றும் தனியுரிமைத் தகவல்களை அணுக அனுமதிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

நமது நாட்டின் தேசிய பாதுகாப்பைப் பாதுகாக்க வேண்டுமெனில் சீனத் தொடர்புடைய மென்பொருள் செயலிகளை உருவாக்கி அல்லது கட்டுப்படுத்துபவர்களுக்கு எதிராக அமெரிக்கா அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள் மற்றும் கணினிகள் போன்ற தனிப்பட்ட மின்னணு சாதனங்களை அணுகுவதன் மூலம், சீனத் தொடர்புடைய மென்பொருள் செயலிகள் பயனர்களிடமிருந்து ஏராளமான தகவல்களை அணுகி அவற்றைக் கைப்பற்ற முடியும், இதில் தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய தகவல்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்கள் அடங்கும்.

இந்தத் தரவு சேகரிப்பு சீன மக்கள் குடியரசின் அரசாங்கம் மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை அமெரிக்க ஊழியர்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்களின் இருப்பிடங்களைக் கண்காணிக்கவும் சீனாவை அனுமதிக்கும். அதுமட்டுமின்றி தனிநபர்களை மிரட்டி தனிப்பட்ட தகவல்களைப் பெற்று ஆவணங்களை உருவாக்குகிறது.

இது அமெரிக்க நபர்களின் தரவைத் திருடவோ அல்லது பெறவோ ஈடுபடும் சீன மக்கள் குடியரசின் அரசாங்கம் மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் தொடர்ச்சியான செயல்பாடு ஆகும். இதன் நோக்கம் சீனாவின் பொருளாதாரத்தை உயர்த்தவும் மற்றும் அந்நாட்டின் தேசிய பாதுகாப்புத் திட்டங்களை முன்னெடுக்கவும் என்பது தெளிவாகியுள்ளது.

இத்தகைய காரணங்களால், அலிபே, கேம்ஸ்கேனர், க்யூ கியூ வாலட், ஷேர் இட், டென்சென்ட் க்யூ கியூ, விமேட், வீ சாட் பே மற்றும் டபிள்யூபிஎஸ் அலுவலகம் ஆகிய 8 சீனச் செயலிகளுக்குத் தடை விதிக்கபபடுகிறது. இத்தடை உத்தரவு செவ்வாய்க்கிழமை முதல் 45 நாட்களில் நடைமுறைக்கு வரும்''.

இவ்வாறு ட்ரம்ப் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x