

உலக நாடுகளின் எதிர்பை மீறி ஈரான் யூரேனியத்தை கூடுதலாக செறிவூட்டும் பணியை தொடங்கியுள்ளது.
அமெரிக்கா உள்ளிட்ட 6 வளர்ந்த நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 2015-ல் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி ஆக்கப்பூர்வ தேவைகளுக்கு யுரேனியம் செறிவூட்ட ஈரானுக்கு அனுமதி வழங்கப்பட்டது. எனினும் அந்நாடு எவ்வளவு யுரேனியம் இருப்பு வைத்துக் கொள்ளலாம், எந்த அளவுக்கு அதை செறிவூட்டலாம் என்ற வரம்பு விதிக்கப்பட்டது.
அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு இந்த ஒப்பந்தத்தில் குறைபாடுகள் உள்ளதாக கூறி அதிலிருந்து விலகினார்.
மேலும் ஈரான் மீது மீண்டும் பொருளாதார தடைகளை விதித்து வருகிறார். இதற்கு பதிலடியாக ஈரான் அணுசக்தி ஒப்பந்த விதிகளை அடுத்தடுத்து மீறி வருகிறது. இந்நிலையில் டெஹ்ரானுக்கு தெற்கே ஃபோர்டோ என்ற இடத்தில் மலைக்கு அடியில் உள்ள ஆலையில் கடந்த 2015-ல் நிறுத்தப்பட்ட யுரேனியம் செறிவூட்டும் பணியை ஈரான் நவம்பர் மாதம் தொடங்கியது.
தற்போது அவ்வாலையில் 20% கூடுதலாக யூரோனிய உற்பத்தியை ஈரான் அதிகரித்துள்ளதாக ஈரான் அரசின் செய்தித் தொடர்பாளர் அலி ரபியீ தெரிவித்துள்ளார்.
இத்தகவலை சர்வதேச அணுசக்தி முகமை உறுதிப்படுத்தியுள்ளது. ஈரானி இந்தத் முடிவுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.