Published : 08 Oct 2015 10:50 AM
Last Updated : 08 Oct 2015 10:50 AM

உலக மசாலா: காகித கார்!

காகித மடிப்புகளின் மூலம் பல்வேறு உருவங்கள் செய்யும் கலை ஒரிகாமி. லண்டனில் உள்ள ஒரு கார் நிறுவனம், காகித அட்டைகளால் செய்யப்பட்ட ஒரிகாமி கார் ஒன்றை உருவாக்கி சாதனை செய்திருக்கிறது. இரும்பு, அலுமினியம் சட்டங்களின் மீது அட்டைகளால் செய்யப்பட்ட ஒரிகாமி வடிவங்களைப் பொருத்தியிருக்கிறார்கள். காரின் கூரை, கதவு, ஸ்டீரிங் அனைத்தும் அட்டைகளால் ஆனவை. இந்த காரை சாதாரண கார்களைப் போல சாலைகளில் செலுத்தியும் காட்டியிருக்கிறார்கள்.

அட்டகாசம்!

அடுத்த ஆண்டு ஜப்பானில் தானாக இயங்கக்கூடிய ரோபோ டாக்ஸிகள் சாலைகளில் வலம் வர இருக்கின்றன. ஃபுஜிசவா, கனகவா குடியிருப்பு பகுதிகளில் 50 பேர் இந்தத் தானியங்கி ரோபோ டாக்ஸியைப் பரிசோதித்துப் பார்த்திருக்கிறார்கள். குடியிருப்பு பகுதிகளில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் சூப்பர் மார்க்கெட்டுக்குத் தானியங்கி டாக்ஸியில் பயணித்திருக்கிறார்கள். பாதுகாப்புக்காக ஓட்டுனர் இருக்கையில் ஒரு மனிதரை அமர வைத்து இந்தப் பரிசோதனைகள் நடத்தப்பட்டிருக்கின்றன.

ஜிபிஎஸ், ரேடார், ஸ்டீரியோ விஷன் கேமரா போன்றவை ரோபோ டாக்ஸியில் பொருத்தப்பட்டிருக்கின்றன. தானியங்கி டாக்ஸிகள் ஏற்கெனவே பல இடங்களில் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் முதல் முறையாக குடியிருப்பு பகுதிகளில் பரிசோதனை நடந்து முடிந்திருக்கிறது. “அடுத்த ஆண்டு ஜப்பான் சாலைகளில் இந்த ரோபோ டாக்ஸிகள் ஓட இருக்கின்றன. 2020ம் ஆண்டுக்குள் ஜப்பானில் ஓடும் பெரும்பாலான டாக்ஸிகள் ரோபோ டாக்ஸிகளாக மாறிவிடும். இயற்கைப் பேரிடர்களின்போது டாக்ஸியை எப்படிப் பயன்படுத்தலாம் என்பது எங்களின் அடுத்த ஆராய்ச்சி’’ என்கிறார் ரோபோ டாக்ஸி திட்டத்தின் தலைவர் ஹிரோஷி நகஜிமா.

மனிதனுக்கு ரோபோ சவாலாக இருக்கப் போகிறது!

உலகிலேயே மிக அரிதான நாய் வகை வியட்நாமின் பு க்வாக் தீவில் வசிக்கும் ரிட்ஜ்பேக் நாய்தான். பிரிட்டனைச் சேர்ந்த 42 வயது கேத்ரின் லேன் வியட்நாமில் இருந்து 2 நாய்களை வாங்கிவந்தார். ஐரோப்பாவிலேயே முதல் முறையாக ரிட்ஜ்பேக் நாய் 4 குட்டிகளை ஈன்றுள்ளது. கேத்ரின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. தனி அறை, படுக்கை வசதி, உணவு என்று இந்த நாய்களை மிகக் கவனமாகப் பார்த்துக்கொள்கிறார்.

24 மணி நேரமும் கண்காணிப்பு கேமரா மூலம் நாய்களைக் கவனித்து வருகிறார். ஒவ்வொரு நாய்க் குட்டியும் 10 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாக இருக்கின்றன. ஏற்கெனவே இருவர் முன்பணம் கொடுத்துவிட்டனர். மிகவும் புத்திசாலியான இந்த நாய்களுக்குப் பயிற்சி அளிப்பது எளிது. எந்தச் சூழ்நிலையையும் விரைவில் ஏற்றுக்கொண்டு விடக்கூடியவை. உலகிலேயே 800 நாய்கள் மட்டுமே வசித்து வருகின்றன.

அடேங்கப்பா…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x