

பூகம்பங்கள் அது ஏற்பட்ட இடத்திலிருந்து 6,000 கிமீ தொலைவுக்கு பூமி மேல் ஓட்டின் நெகிழ்வுத் தன்மை கொண்ட அம்சங்களை மாற்றவல்லது என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
அதாவது சில வாரங்களுக்கு அழுத்தங்களை தாங்கும் ஆற்றல் இல்லாமல் செய்து விடுகிறது என்கிறது புதிய ஆய்வு ஒன்று.
அதாவது, பூமி என்பது ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்ட இயங்குவிசை கொண்ட ஒரு ஒழுங்கமைப்பு. இதில் மிகப்பெரிய பூகம்பங்கள் அது ஏற்பட்ட இடத்திலிருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தூரமுள்ள பகுதிகளில் கூட அலைத்தொடரான நிகழ்வுகளை உருவாக்கவல்லது என்கிறது இந்த ஆய்வு.
"பூகம்பங்கள் புவி மேல் ஓட்டின் நெகிழ்ச்சியான அம்சங்களை சுமார் 6,000 கிமீ தொலைவுக்கு மாற்றியமைக்கிறது. சில வாரங்களுக்கு அழுத்தத்தை தாங்கக்கூடிய அதன் சக்தியை குறைக்கிறது” என்று மாஸுசெட்ஸ் தொழில்நுட்ப துறையின் புவிமைய, வானியல் விஞ்ஞானப் பிரிவின் ஆய்வாளர் கெவின் காவோ தெரிவித்துள்ளார்.
பூகம்பத்திலிருந்து புறப்படும் மேல்பகுதி ஆற்றல் அலைகள் மற்றொரு புவிப்பாறை பிளவின் ஊடாக கடக்கும் போது, பூமியின் மேற்பகுதியை பிணைத்து இறுக்கிக் காக்கும் உராய்வு அம்சங்களுக்கு இடையேயான சமநிலையை மாற்றியமைக்கிறது. மேலும், நெகிழ்ச்சித் தன்மையை அனுமதிக்கும் புவி மேல் ஓட்டின் அழுத்த தாங்கி அமைப்பையும் மாற்றி அமைக்கிறது. அழுத்த நிலை இதனை தோல்வியடையச் செய்து விடுகிறது.
எனவே மேல்புற ஆற்றல் அலைகள் கடந்து செல்லும் போது, புவி ஓட்டின் இத்தகைய குணாம்சங்கள் மாற்றி அமைக்கப்படுகிறது அல்லது முற்றிலும் மாறிவிடுகிறது. அதிக ஆற்றல் சேமிப்புடன் இருக்கும் தொடர்பாறை அல்லது பெரும்பாறை பலவீனமடையத் தயாராக இருக்கும் சூழலில் இந்த ஆற்றல் அலைகள் கடப்பினால் மேலும் ஆற்றலை தன்னிலே சேமிக்க நேரிடுகிறது. இதனால் எந்த நேரத்திலும் பூகம்பம் ஏற்பட வாய்ப்பு ஏற்படுகிறது.
இதனை இந்த ஆய்வாளர்கள் பூகம்பத்தின் புலம்பெயர்வு என்று வர்ணிக்கின்றனர். இதனால்தான் நேபாள் பூகம்பத்தையடுத்து அதன் அலைகள் கடந்து சென்ற மேற்குப் பகுதியில் அடுத்த பெரிய பூகம்பம் ஏற்படலாம் என்று கணிக்கப்பட்டது.
இந்தியப் பெருங்கடலில் சுமத்ரா தீவுக்கு அருகே ஏற்பட்ட 8.6 பூகம்பத்தை அடுத்து இந்த ஆய்வாளர்கள் பல்வேறு உயர் தொழில்நுட்பங்களைக் கொண்டு அதன் போக்கை ஆராய்ந்தனர்.
“இந்தியப் பெருங்கடல் பூகம்பம் ஏற்பட்ட போது, மேல்புற ஆற்றல் அலை ஜப்பானுக்கு வடகிழக்கு பகுதியின் ஊடாக கடந்தது. இதனால் அப்பகுதியில் பூகம்ப நடவடிக்கை அதிகரித்தது” என்கிறார் காவோ.
ஏற்கெனவே 2011 ஜப்பானிய மகா பூகம்பத்தினால் பூமியின் மேல் ஓடு நெருக்கடிக்குள்ளானது. இதனையடுத்து நிறைய நில நடுக்கங்கள் ஏற்பட்டன.
எனவே பெரிய பூகம்பங்களுக்குப் பிறகு வெளிப்படும் ஆற்றல் அலைகள் கடந்து போகும் பாதை அடுத்தடுத்த பூகம்ப நிகழ்வுகளை தீர்மானிக்கின்றன என்கிறது இந்த ஆய்வு.