Last Updated : 03 Jan, 2021 09:28 AM

 

Published : 03 Jan 2021 09:28 AM
Last Updated : 03 Jan 2021 09:28 AM

அமெரிக்காவின் சோகம்: கலிபோர்னியாவில் இறுதிச்சடங்கு செய்ய இடமில்லாமல் கரோனாவில் உயிரிழந்தவர்கள் உடல்கள் காத்திருக்கும் அவலம்

படம் உதவி : ட்விட்டர்

லாஸ்ஏஞ்செல்ஸ்


அமெரிக்காவில் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்கள் உடலை புதைக்க இடமில்லாமல் கலிபோர்னியாவில் உள்ள கல்லறைகளில் மனித உடல்கள் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

கலிபோர்னியாவின் தெற்குப்பகுதியில் உள்ள பல்வேறு கல்லறைகளில் இடமில்லாமல் நாட்கணக்கில் மனித உடல்கள் காத்திருக்கும் சோகம் நடந்து வருகிறது.

கடந்த ஆண்டு நவம்பரில் சீனாவில் உருவாகிய கரோனா வைரஸ், உலக நாடுகளை இன்னும் உலுக்கிவருகிறது. இதில் உலக நாடுகளிலேயே மோசமாக பாதிக்கப்பட்டது அமெரி்க்காதான். இதுவரை 3.50 லட்சம் மக்களுக்கு மேல் கரோனாவில் உயிரிழந்துள்ளனர், 2 கோடி மக்களுக்கும் மேலாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்காவில் கடந்த ஆகஸ்ட் மாதத்துக்கு மேல் மீண்டும் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. நாள்தோறும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதி்க்கப்படுவதும், ஆயிரக்கணக்கில் உயிரிழப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது. அதிலும் கடந்த சில நாட்களாக நாள்தோறும் லட்சக்கணக்கில் கரோனாவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அமெரி்க்காவில் நேற்று 2.32லட்சம் பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,107 பேர் கரோனாவில் உயிரிழந்துள்ளனர் என ஜான் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கிறது.

இந்நிலையில் கலிபோர்னியாவில் உள்ள தெற்குப்பகுதி நகரங்களில் கரோனாவில் உயிரிழந்தவர்களை புதைக்க கல்லறைகளில் இடமில்லாமல் மனித உடல்கள் நாட்கணக்கில் காத்திருக்கின்றன.

லாஸ்ஏஞ்செல்ஸ் நகரில் உள்ள கான்டினென்டல் ஃபனரல் ஹோம் உரிமையாளர் மாக்டா மால்டோனாடோ கூறுகையில் “ நான் கடந்த 20 ஆண்டுகளாக இறுதிச்சடங்கு செய்யும் பணியில் இருக்கிறேன். என் வாழ்க்கையில் இதுபோன்ற சூழலை நான் பார்த்தது இல்லை, நடந்ததும் இல்லை.

கரோனாவில் உயிரிழக்கும் உடல்களை என்னால் புதைக்க முடியாத அளவுக்கு தொடரந்து வந்து கொண்டே இருக்கின்றன. பலரிடம் உடலை எடுத்துச் செல்லுங்கள் கல்லறையில் இடமில்லை, உங்கள் குடும்ப உறுப்பினரை புதைக்க இடமில்லை எனச் சொல்வதற்கு மன்னிக்கவும் எனச் சொல்லிவிட்டேன்.

சராசரியாக நாள்தோறும் 30 உடல்களை கல்லறை அடுக்குகளில் இருந்து எடுத்து புதிய உடல்களை வைக்கிறேன். வழக்கமாக செய்யும் பணியைவிடஇது 6 மடங்கு அதிகமாகும். எங்களுக்கு வழி தெரியாமல் மனிதஉடல்களை குளிர்பதனப் பெட்டியில் காத்திருப்பில் வைத்திருக்கிறோம். இதற்காக கூடுதலாக 15 மீட்டர் குளிர்பதனப்பெட்டியை வாடகைக்கு எடுத்திருக்கிறேன்” எனத் தெரிவி்த்தார்.

கலிபோர்னியா ஃபனரல் டைரக்டர்ஸ் அசோசியேஷன் அமைப்பின் இயக்குநர் பாப் ஆச்சர்மான் கூறுகையில் “ கரோனாவில் உயிரிழந்தவர்களுக்கு இறப்புச் சான்றிதழ் வழங்குவதில் தாமதம் காரணமாக, உடல்களை புதைக்கும், எரிக்கும் பணி தொடர்ந்து மெதுவாகியுள்ளது. வழக்கமாக ஒருவர் இறந்துவிட்டால் 2 நாட்களில் உடல்அடக்கம் நடந்துவிடும், ஆனால், இப்போது ஒரு வாரத்துக்கும் மேல் ஆகிறது.

எங்களால் உடல்களை பாதுகாக்க முடியவில்லை. இன்னும் மோசமான நாட்கள் எங்களை நோக்கி இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

லாஸ்ஏஞ்சல்ஸ் கவுண்டியில் மட்டும் கரோனாவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அமெரிக்காவில் சராசரியாக நாள்தோறும் 2,500 பேர் உயிரிழந்து வருகின்றனர்.

அர்கனாஸ், லூசியானா, டெக்சாஸ், அரிசோனா, ஆகிய நகரங்களில் கடந்த சில நாட்களாக சராசரியாக 3 ஆயிரம் பேருக்கும் மேல் புதிதாககரோனாவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அமெரிக்காவில் இன்னும் விடுமுறைக் காலம் முடியாததால், மக்கள் கூடும்போது, இன்னும் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x