மும்பை தீவிரவாத தாக்குதலில் முக்கியக் குற்றவாளி: லஷ்கர் இ தாய்பா தலைவர் ஜாகிர் உர் ரஹ்மான் லக்வி பாகிஸ்தானில் கைது
மும்பை தீவிரவாத தாக்குதலி்ல் மூளையாகச் செயல்பட்டவரும், முக்கியக் குற்றவாளியுமான லஷ்கர் இ தாய்பா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஜாகிர் உர் ரஹ்மான் லக்வி பாகிஸ்தானில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
தீவிரவாத செயல்களுக்கு பணஉதவி வழங்கிய விவகாரத்தில் லக்வியை போலீஸார் கைது செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மும்பை தீவிரவாத தாக்குதல் வழக்கில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஜாமீனில் இருந்துவரும் லக்வி, இன்று தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் எந்த இடத்தில் வைத்து லக்வி கைது செய்யப்பட்டார் எனக் கூற பாகிஸ்தான் தீவிரவாத தடுப்பு போலீஸார் மறுத்துவிட்டனர்.
இதுகுறித்து பஞ்சாப் மாகாண தீவிரவாத தடுப்புp பிரிவினர் வெளியிட்ட அறிக்கையில் “ உளவுத்துறையின் அறிக்கையின் அடிப்படையில் பஞ்சாப் மாகாண தீவிரவாத தடுப்புப்பிரிவினர் நடத்திய சோதனையில் தீவிரவாதிகளுககு நிதியுவதி அளித்த புகாரில் ஜகி உர் ரஹ்மான் லக்வி கைது செய்யப்பட்டுள்ளார். லாகூர் போலீஸில் லக்வி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிறிய மருத்துவமனை நடத்தி, அதன்மூலம் தீவிரவாதத்துக்கு நிதி அனுப்பி வரும் பணியை லக்வி செய்துவந்துள்ளார். இந்த மருத்துவமனை மூலம் கிடைக்கும் பணத்தையும் தீவிரவாதச் செயல்களுக்கு பயன்படுத்தியுள்ளார்.
லஷ்கர் இ தாய்பா அமைப்பு, ஐ.நா.வால் தடை செய்யப்பட்ட அமைப்பாகவும், அதன் தலைவர் லக்வி தேடப்படும் தீவிரவாதியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. லாகூர் நீதிமன்றத்தில் லக்வி மீதான விசாரணை விரைவில் தொடங்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
