

பைஸர் பயோஎன்டெக் நிறுவனத்தின் கரோனா வைரஸ் தடுப்பு மருந்தை அவசரகாலத்துக்கு பயன்படுத்திக்கொள்ள உலக சுகாதார அமைப்பு அனுமதியளித்துள்ளது. இதன் மூலம் ஏழை நாடுகளுக்கு விரைவில் இந்த தடுப்புமருந்து கிடைக்கும்.
பைஸர் நிறுவனத்தின் கரோனா தடுப்பு மருந்துகளை மக்களுக்குச் செலுத்த ஏற்கெனவே ஐரோப்பிய நாடுகளும், பிரிட்டனும், அமெரிக்காவும் அனுமதியளித்துவிட்டன. மக்களுக்கு இந்த பைஸர் தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு நாடுகளில் இருக்கும் மருந்துக் கட்டுப்பாட்டுத்துறை இயக்குநரகம், கரோனா தடுப்பு மருந்துகளுக்கு சுயமாக ஒப்புதல் வழங்கும். ஆனால். சில நாடுகளில் அதுபோன்ற அமைப்பு இல்லாத சூழலில் உலக சுகாதார அமைப்பு முன்னெடுத்து, பரிசீலித்து அனுமதி வழங்குகிறது.
உலக சுகாதார அமைப்பு நேற்று வெளியி்ட்ட அறிவிப்பில், “ பைஸர் பயோஎன்டெக் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசிகளை அவசரகாலத்துக்கு பயன்படுத்த அனுமதி அளித்துள்ளோம். சுயமாக மருந்து தரக்கட்டுப்பாடு அமைப்பு வைத்திருக்கும் நாடுகள் பைஸர் நிறுவனத்தின் மருந்துகளை ஆய்வு செய்து, இறக்குமதி செய்து பயன்படுத்தலாம். மக்களுக்குச் செலுத்தலாம்.
பைஸர்-பயோஎன்டெக் நிறுவனம் தயாரிக்கும் கரோனா தடுப்பு மருந்துகளுக்கு ஏற்கெனவே அமெரிக்கா, பிரிட்டன், பல ஐரோப்பிய நாடுகள் அனுமதியளித்துள்ளன. அங்குள்ள மக்களுக்கு இந்த பைஸர் தடுப்பூசி மருந்துகள் செலுத்தப்பட்டு வருகின்றன. உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்திருந்த பாதுகாப்பு மற்றும் திறன்களை அந்த மருந்து பெற்றுள்ளது.
பைஸர் தடுப்பு மருந்துகளை மைனஸ் டிகிரிக்கும் அதிகமான உறை குளரில் சேமித்து வைக்க வேண்டும் என்பதால், வளர்ந்துவரும் நாடுகளுக்கு இந்த மருந்துகளை சேமித்துவைப்பதும், தேவையான மின்சாரம் வழங்குவதும் சவாலாக அமையும். இந்த சேமிப்பு வசதிகள் இருக்கும் நாடுகளி்ல் இருந்து மருந்துகளை ஏழை நாடுகளுக்கு அனுப்பத் தேவையான உதவிகளும் செய்யப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.