Published : 31 Dec 2020 03:18 AM
Last Updated : 31 Dec 2020 03:18 AM

ஐரோப்பிய யூனியன் அமைப்பிடம் பாஸ்மதி அரிசிக்கு உரிமை கோரி இந்தியா, பாகிஸ்தான் கடும் போட்டி

இஸ்லாமாபாத்

பாஸ்மதி அரிசிக்கான புவிசார் உரிமையை இந்தியாவுக்கு வழங்க வேண்டும் என ஐரோப்பிய யூனியனில் இந்தியா விண்ணப்பித்துள்ளது. மெல்லிய நீண்ட அளவிலான நறுமணம் கொண்ட அரிசி வகையான பாஸ்மதி, வட மாநிலங்களில் பிரத்தியேகமாக விளைவிக்கப்படுகிறது. எனவே பாஸ்மதி அரிசியின் புவிசார் உரிமையை இந்தியா கோரியுள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தானும் பாஸ்மதி அரிசிக்கான உரிமையை கோரி வருகிறது. பாகிஸ்தான் ஆண்டுக்கு 5 முதல் 7 லட்சம் டன் வரையிலான பாஸ்மதி அரிசியை ஏற்றுமதி செய்கிறது. அதில் ஐரோப்பிய நாடுகளுக்கு மட்டும் 2.5 லட்சம் டன் ஏற்றுமதி செய்கிறது.

ஆனால், புவிசார் குறியீடு சட்டத்தின்படி பாஸ்மதி அரிசி பாகிஸ்தானின் பாதுகாக்கப்பட்ட உள்ளூர் பொருள் என்று இதுவரை பதிவு செய்யப்படவில்லை. 2000-ம் ஆண்டில் இருந்தே பாகிஸ்தான் பாஸ்மதி அரிசி ஏற்றுமதியாளர்கள், புவிசார் குறியீட்டு சட்டத்தை வகுத்து, அதன்படி பாஸ்மதி அரிசியை பாகிஸ்தான் பொருளாக பதிவு செய்ய கோரி வருவதாகவும் இதுவரை பாகிஸ்தான் அதை செயல்படுத்தவில்லை எனவும் கூறுகிறார்கள்.

கடந்த மார்ச் மாதம்தான் பாகிஸ்தான் புவிசார் குறியீடு சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. ஆனாலும் அதற்கான விதிமுறைகள் இன்னும் வகுக்கப்படவில்லை. தற்போது பாஸ்மதி அரிசிக்கு இந்தியா உரிமை கொண்டாடுகிறது என்றதும் விதிமுறைகள் வகுக்க தீவிரம் காட்டி வருகிறது. விதிமுறைகள் வகுக்கப்பட்ட பிறகு பாஸ்மதி அரிசி புவிசார் குறியீட்டின்படி பதிவு செய்யப்படும். அதன்பிறகு இந்தியா, பாகிஸ்தான் இடையிலான பாஸ்மதி உரிமைக்கான வழக்கு மேலும் வலுப்பெறும்.

இந்த விவகாரத்தில் முன்னதாக பாஸ்மதி அரிசி இந்தியா, பாகிஸ்தான் இருநாட்டுக்கும் உரிமை உண்டு என்று பாகிஸ்தான் வாதிட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x