ஏமன் உள்நாட்டுப் போரில் அதிபரின் கை ஓங்குகிறது

ஏமன் உள்நாட்டுப் போரில் அதிபரின் கை ஓங்குகிறது
Updated on
1 min read

சவுதி அரேபிய கூட்டுப் படைகளின் தாக்குதலால் ஏமனில் அதிபர் மன்சூர் ஹைதியின் கை ஓங்கி வருகிறது.

ஏமன் நாட்டில் ஷியா, சன்னி முஸ்லிம்களுக்கு இடையே பல ஆண்டுகளாக சண்டை நீடித்து வருகிறது. அந்த நாட்டின் அதிபர் மன்சூர் ஹைதி சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்தவர். அவருக்கு எதிராக ஷியா முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சி படையினர் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு தலைநகர் சனா உள்ளிட்ட பெரும் பகுதியைக் கைப்பற்றினர்.

கிளர்ச்சிப் படையின் ஆதிக்கத்தால் அதிபர் மன்சூர் ஹைதி, சவுதி அரேபியாவில் தஞ்சம் அடைந்தார். சன்னி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் சவுதி அரேபியா அதிபருக்கு ஆதரவாக ஏமன் மீது போர் தொடுத்தது.

கடந்த சில மாதங்களாக ஹவுத்தி கிளர்ச்சிப் படையினரை குறிவைத்து சவுதி அரேபிய கூட்டுப் படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் அதிபர் மன்சூர் ஹைதியின் கை ஓங்கி வருகிறது.

ஏமனின் மூன்றாவது பெரிய நகரான டெய்ஸ் கிளர்ச்சிப் படையின் கட்டுப்பாட்டில் இருந்தது. அந்த நகரை அதிபர் ஆதரவு படைகள் நேற்றுமுன்தினம் கைப்பற்றின. இருப்பினும் பாதிக்கும் மேற்பட்ட பகுதி இன்னமும் கிளர்ச்சிப் படையின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது.

ஷியா முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் ஈரான் நாடு, கிளர்ச்சிப் படைகளுக்கு முழு ஆதரவு அளித்து வருகிறது.

இதனால் உள்நாட்டுப் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. போரில் இதுவரை 5600 பேர் உயிரிழந்தி ருப்பதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்கள் ஐ.நா. அகதிகள் முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். அந்த நாட்டில் உணவு, குடிநீர், மருந்து, எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு நீடிக்கிறது.

இந்நிலையில் சவுதி கூட்டுப் படையினரின் தாக்குதலைக் கண்டித்து ஷியா முஸ்லிம் பிரிவைச் சேர்ந்தவர்கள் தலைநகர் சனாவில் ஐ.நா. அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது சவுதி அரேபியாவின் அத்துமீறலை ஐ.நா. தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in